தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை அதிகரிப்புக்கு என்ன காரணம்? விரிவாக பார்ப்போம்…
இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 4.72 லட்சம் ஹெக்டேர் (11.66 லட்சம் ஏக்கர்) தென்னை பயிரிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 கோடியே 26 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தென்னை பயிரிடும் பரப்பும் தேன்னைகள் எண்ணிக்கையும் இவ்வளவு அதிகமாக இருந்தாலும் தேங்காயின் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 20 ரூபாயாக இருந்த சிறிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசி வாரத்தில் 30 ரூபாயாகவும் 35 ரூபாயாக இருந்த பெரிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசியில் 50 ரூபாயாகவும் உயர்ந்தது. சில ஊர்களில் இதைவிட அதிகம்.
பொதுவாக கொப்பரை (எண்ணெய் எடுப்பதற்கான தேங்காய்), தேங்காய் எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே தேங்காய்க்கான விலையும் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை நிலையம் (NAFED-National Agricultural Cooperative Marketing Federation of India Ltd) ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவிலான கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. இவற்றைத் தவிர்த்து தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. சந்தை நிலவரத்தைப் பொருத்தே, இவற்றின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
”நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் விளையும் தேங்காயில் 20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்ளூர்ச் சந்தையில் 10 சதவீதம் விற்கப்பட்டது; மீதி 70 சதவீதம் கொப்பரை (தேங்காய் எண்ணெய்) உற்பத்திக்குப் போனது. சமீப காலமாக அரபு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சமையலுக்கு தேவை அதிகரிப்பு, சபரிமலை சீசன் போன்றவற்றால் தேங்காய் தேவை இப்போது அதிகமாகியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு டன் பச்சைத் தேங்காய் ரூ.55 ஆயிரம், கருப்புத் தேங்காய் (கொப்பரைக்கான தேங்காய்) ரூ.61 ஆயிரம், கொப்பரை கிலோ ரூ.148 என்று விலை உள்ளது” என்கிறார், தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலப் பிரதிநிதி கப்பளாங்கரை தங்கவேல்.
இவ்வாறு தேங்காய் விலை அதிகரித்துள்ளதுக்கு கடந்த ஆண்டில் கோடையில் ஏற்பட்ட கடும் வெப்பமே காரணம் என்பது பலரும் கருத்தாகவுள்ளது.
”தென்னைக்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாண்டினால் பல பாதிப்புகள் ஏற்படும். கடந்த கோடையில் 40 டிகிரிக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவானது. அதனால் பாளைகள் வெடித்து குரும்புகள் உதிர்ந்துவிட்டன. காய்ப்புத் திறன் குறைந்துவிட்டது. இதனால் வழக்கமான விளைச்சலில் 60 சதவீதம்தான் விளைச்சல் கொடுத்தது. தேவைக்கேற்ற வரத்து இல்லாததே இப்போதைய விலையேற்றத்துக்கு மிக முக்கியக் காரணமாகவுள்ளது” என்கிறார் கப்பளாங்கரை தங்கவேல்.
அதேநேரம், கோடையில் பதிவான அதிகப்படியான வெப்பம் தவிர, கேரளா வாடல் நோயும் தேங்காய் உற்பத்தி குறைய முக்கியக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். கேரளா வாடல் நோய் காரணமாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கேரளா வாடல் நோய்க்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுக்காமல், அவற்றை வெட்டுவது மட்டுமே இதற்குத் தீர்வு என்று ஆலோசனை தருவதாக விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். பாதிப்பைக் கணக்கிடுகையில், தமிழக அரசு தரும் இழப்பீடும் மிகமிகக் குறைவு என்பது விவசாயிகள் பலருடைய ஆதங்கமாகத் தெரிகிறது.
கேரளா வாடல் நோயால் தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருவதால் தென்னை பயிரிடும் பரப்பு குறைந்து வருவதாக விவசாயிகள் பலரும் தகவல் தெரிவித்தனர்.
வெயிலின் தாக்கம், கேரளா வாடல் நோய் பாதிப்பால் தேங்காய் உற்பத்தி குறைந்திருப்பதுடன், சில எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதுமே தற்போதைய விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
”கடந்த ஆண்டில் தேசிய வேளாண் விற்பனை நிலையம் மூலமாக 8 லட்சம் மூட்டைகள் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை ஜனவரி, பிப்ரவரியில் விற்பனை செய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், சிலர் அவசரமாக தனியார் நிறுவனம் மூலமாக விற்று விட்டனர். கோவை, திருப்பூரில் மட்டும் 6 லட்சம் மூட்டைகள் தனியார் குடோன்களில் தேங்கியுள்ளன. தற்போதைய விலையேற்றத்துக்கு இதுவும் முக்கியக் காரணம். இதைத் தடுக்க வேண்டும்” என்கிறார் கப்பளாங்கரை தங்கவேல்.