No menu items!

முதல்வர் நடித்த ‘ஒரே இரத்தம்’ – ஆ.ராசா சொன்ன புது தகவல்

முதல்வர் நடித்த ‘ஒரே இரத்தம்’ – ஆ.ராசா சொன்ன புது தகவல்

மாஸ் ரவி இயக்கிய ‘காத்துவாக்குல ஒரு காதல்’ பட விழாவில் கலந்துகொண்ட, திமுக எம்பி ஆ.ராசா சினிமா குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ என்ற படம் குறித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியதாவது…

நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் கலை இலக்கியம் – திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரையில் அதிகமான நேரத்தை சினிமாவிற்கு ஒதுக்க இயலாமல் போய்விட்டது. திரைப்பட நிகழ்வுகள் சிலவற்றில் தலைவர் கலைஞர் அவர்களுடன் பங்கேற்றது உண்டு. அவ்வளவுதான்.

நாங்கள் இளவயதில் பார்த்த திரை உலகமும், இன்றைக்கு இருக்கிற திரை உலகமும் வேறு. நாங்கள் அப்போது அனுபவித்த இசையும், இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகள் அனுபவிக்கும் இசையும் இருவேறு உலகத்தில் இருக்கின்றனவோ என்கிற அளவிற்கு திரை உலகம் மாறியிருக்கிறது. சிலர் கூறுவதைப்போல சீரழிந்திருக்கிறதா என்பதையெல்லாம் நான் மிகப்பெரிய ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாதவன்.

ஆனால் காதலும், வீரமும் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டற பின்னியிருந்தது திராவிட இலக்கியங்கள், சங்க பாடல்களில் இருந்து பல்வேறு விதமான குறிப்புகளை பேரறிஞர் அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் எழுத்தில் அளித்ததை படித்து வளர்ந்தவர்கள் நாங்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,கலைஞர் எழுத்தில் விளைந்த ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ஜாதி ஒழிப்பு குறித்த மையக்கருத்து அடி நாதமாக இருக்கும். எப்போதுமே ஒரு கருத்தை செயற்கையாகவோ இயற்கையாகவோ நம் மீது சேர்த்தால் அதன் விளைவுகள் அதிகமாக இருக்கும்.அந்த வகையில், முதலமைச்சர் அவர்கள் நடித்த ‘ஒரே இரத்தம்’ திரைப்படமும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

8-ம் வகுப்பு படிக்கும் வரையில் திராவிட இயக்கம் என்றால் என்ன, பெரியார் யார், அண்ணா யார், கலைஞர் யார் என்று அறியாதவன் நான். ஓரு பேச்சு போட்டியில் கலந்துகொண்டேன். தமிழாசிரியர் எழுதிக்கொடுத்ததை பேசி பரிசு பெற்றேன். அதன் பிறகு தமிழ் மீது ஈடுபாடு வந்தது.பின்னர் பெரியாரை, அண்ணாவை, கலைஞரை அவர்கள் வாயிலாக சங்க இலக்கியத்தை திராவிட பண்புகளை எல்லாம் அறிந்தேன். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக 3 முறை ஒன்றிய அமைச்சராக இருந்தேன். அதில் மிகப்பெரிய சோதனை வந்தும், அதை எதிர்த்து நிற்கும் வலிமை உள்ளவனாக நின்றுகொண்டிருக்கிறேன். இந்த வலிமை, திராவிட இயக்கம் தந்திருக்கின்ற கலை, இலக்கியம், அரசியல் அளித்ததுதான்.

‘ஏறு தழுவுதல் ஆடவர்க்கு அழகு; அவர் வாயில் வெற்றிலை சாறு தடவுதல் மகளிர்க்கு அழகு’ என்று காதலை பற்றி சொல்லி இருக்கிறார் கலைஞர். இந்த ‘காத்துவாக்குல ஒரு காதல்’ கதையை கேட்டபோது இரண்டு உண்மையான காதலர்கள் சந்திக்கின்ற தடையை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பூலோக பகுதியிலே இருக்கின்ற தடைகளை எல்லாம் தாண்டி வருகின்ற அந்த ஓட்டத்தை தந்திருப்பதாக சொன்னார்கள்.

சினிமாவாக இருந்தாலும், கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும் சமூகத்தில் இருக்கின்ற புழுக்கத்தை சமூகத்தில் இருக்கின்ற கொதிப்பை வெளியேகொண்டு வந்து அவற்றை தீர்க்க கூடிய தீர்க்கமான ஆயுதமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற இயக்கம் திராவிட இயக்கம். உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ காதல் கதைகளை எல்லாம் சுருக்கி வைத்து பார்த்தால் இரண்டே இரண்டு விஷயம் தான். உன்னை நான் காதலிக்கிறேன் அல்லது நான் காதலித்துக் கொண்டே இருப்பேன். இதற்கு தான் இத்தனை இலக்கியங்கள் எல்லாம்.

இன்றைக்கு இருக்கிற சாதியம், அரசியல், பொருளாதார வேறுபாடு, மதவெறி இவைகளை எதிர்த்து ஒரு காதல் வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்க்கு இளமை மட்டும் காரணம் அல்ல; அதையும் தாண்டி ஒரு மனப்பக்குவமும், புரிந்துகொள்ளுகின்ற ஆற்றலும் வேண்டும் என்கின்ற அந்த உணர்வோடு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...