தனிப்பட்ட வாழ்விலும், சினிமாவிலும் ஜெயம் ரவிக்கு சமீபகாலமாக சறுக்கல்கள். 2019-ல் கோமாளி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். பின்னர், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் 2 பாகங்களும் பெரிய வெற்றி. ஆனால், இடையில் அவர் நடித்த அகிலன், பூமி, சைரன், இறைவன், பிரதர் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
காதலிக்க நேரமில்லை பட விழாவில் இதுகுறித்து அவரே மனம் திறந்து பேசியுள்ளார். ‘‘2014ம் ஆண்டு எனக்கு ஒரு சில சிக்கல்கள் வந்தன. 3 ஆண்டுகள் ஒரே படம் பண்ணினேன். (அமீர் இயக்கிய ஆதிபகவன்). அந்த பட கெட்அப் காரணமாக என்னால் வெளியிடங்களுக்கு வர முடியாத நிலை. ஆனாலும், அந்த படம் சரியாக போகவில்லை. கொஞ்சம் அப்செட் ஆனேன். ஆனால், அடுத்து ரோமியோ ஜூலியட், பூலோகம், தனிஒருவன் என வரிசையாக 3 ஹிட் படங்கள் கொடுத்தேன்.
படம் ஓடாதபோது யோசித்து பார்ப்பேன். நம்மால் எந்த பிரச்னையும் இல்லை. நம் வேலையை சரியாக செய்து வருகிறோம் என்று முடிவுவுக்கு வருவேன். அடுத்த படத்துக்கு சென்றுவிடுவேன். இந்த ஆண்டு ஒரு வெற்றியை கொடுப்பேன். இப்போது என் வசம் வரிசையாக நல்ல படங்கள் இருக்கின்றன.
பொங்கலுக்கு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வருகிறது. ஒரு விஷயத்தை, வித்தியாசமாக, புதுமையாக கதை சொல்கிறது. காலங்கள் மாறி வருகிறது. சில விஷயங்களை நாம் ஏற்க வேண்டும். அதை தெளிவாக சொல்கிறது. ஒரு பெண் இயக்குனர் என்பதால் கிருத்திகாவின் கருத்து பேசப்படும். அடுத்து இன்னொரு பெண் இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கிறேன். அடுத்து வரிசையாக நல்ல படங்கள் இருக்கிறது. நான் திரும்ப எழுவேன்’ என்றார்.
பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றாலும் அது மணிரத்னம் படம் என்ற கணக்கில் சேர்ந்துவிடுவதால், 2025ம் ஆண்டு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஜெயம்ரவி இருக்கிறார். அதனால்தான், சுதா கொங்காரா இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார்.