கன்னியாகுமரியில் சுனாமியில் குடும்பத்தை இழந்த அருண்விஜய் தன்னைப் போன்ற ஒரு சிறுமியை தங்கையாக வளர்த்து வருகிறார். மாற்று திறனாளியான இவர், பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களை செய்யும் சிலரை அடித்து துவம்சம் செய்வதோடு இருவரை கொடூரமாகக் கொலையும் செய்கிறார். போலீஸில் அவரே சரணடைந்ததால் அவருக்கு பிணை கிடைத்து விடுகிறது. வெளியில் வந்த அவர் அந்த மூன்றாம் நபரை தேடிக்கொண்டிருக்கிறார். உண்மையை சொன்னால் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் போலீஸ் அடித்தும் அதை மறைக்கிறார்.
இதனால் பயந்து போன தங்கை அண்ணனை போலீஸ் பிடித்தால் தான் மீண்டும் அநாதை ஆகி விடுவோமே என்று பயந்து விபரீத முடிவை எடுக்கிறார். அது என்ன என்பதும், அருண் விஜய் என்ன ஆனார் என்பதையும் இயக்குனர் பாலா பதறடிக்கும் வகையில் தன் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.
அருண் விஜய் கதாபாத்திரத்தை தனக்கேயுரிய வித்தியாசமான அடையாளத்தில் வடிவமைத்தது முதல் அவரது உடல் மொழி அசைவுகளை காட்டியது வரைக்கும் அப்படியே தன் உள்ளத்தின் வெளிப்பாடுகளை உணர்த்தியிருக்கிறார். பாலாவின் உணர்வுகளை உள்வாங்கி நடித்ததோடு அதற்காக கடுமையான உழைப்பைம் கொட்டியிருக்கிறார் அருண் விஜய்.
அவரது நடிப்பின் விஸ்வரூபத்தை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. கலங்கி அழுவது முதல் கலாட்டா செய்து சிரிக்க வைப்பது என்று பல இடங்களில் மனதில் நிறைகிறார். வாய் பேசாத, காது கேளாதவர்களின் மன உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தும் முகபாவங்கள். அருண் விஜய்யின் உழைப்புக்கு பலன் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே நமக்குள் வருகிறது.
நாயகியாக ரோஷினி பிரகாஷ் அடாவடி அன்பு கொண்டவராக வருகிறார். பெண்களை கவர்சிக்காக பயன்படுத்தும் வழக்கம் பாலாவிடம் எப்போதும் இருந்ததில்லை. இதிலும் ஹீரோயினை முதுகில் கும்மாங்குத்து குத்து வைக்கவே பயன்படுத்தியிருக்கிறார். சீனா பெண் போலவே வேடம் போட்டுக்கொண்டு அவர் அடிக்கும் லூட்டியை ரசிக்க முடிகிறது.
தங்கையாக ரிதா கண்ணீரும் கவலையுமாக படம் முழுவதும் வந்து நடிப்பில் அசத்தியிருக்கிறார். நீதிபதியாக கடுகடுப்பான முகத்துடன் வந்து உருண்டை கண்களால் மிரட்டி எடுத்திருக்கிறார் மிஷ்கின். கைதட்டல் வசனங்களை அவரே எழுதியது போல பேசுவது சிறப்பு. விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி மிடுக்கு காட்டுகிறார். அருண் விஜய் பேசிய வார்த்தைகளில்லிருந்து கண்டுபிடிப்பது புத்திசாலியான் இடம். இதேபோல் சிவாஜி தோற்றத்தில் இருக்கும் நபரை வைத்து பேசும் வசனம் கைதட்டல் பெறுகிறது.
படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் புது முகங்களாக இருப்பதால் இயல்பாகவே கதைக்குள் நாம் பயணிக்க முடிகிறது. எந்த காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் சம்பவமான பெண்கள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறலையே படம் முழுவதும் வைத்திருப்பதால் கதை இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. தண்டனையாக கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அந்த நபர்களை கையாண்டிருக்கும் விதமும் வன்முறை காட்சிகளும் அதிர வைக்கின்றன.
சண்டை காட்சிகளில் அலற விட்டிருக்கிறார் மாஸ்டர் சில்வா. சண்டைக்கலைஞர்கள் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய மனிதர்கள். கதைக்களத்தை வித்தியாசமாக தேர்ந்தெடுத்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை மையமாக வைத்திருப்பது சிறப்பு. க்ளைமேக்ஸ் காட்சியில் தங்கை கதாபாத்திரம் மனதை கலங்க வைக்கிறது.
பாலாவின் மன அதிர்வுகளை பின்னணி இசையாக மாற்றி அதிர விட்டிருக்கிறார் சாம்.சி.எஸ். பாடல்களுக்கு இசை ஜி.வி.பிரகாஷ். பாடல்கள் கார்த்திக் நேத்தா வரிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. டியுனும் எடுபடவில்லை. அருள் தாஸ், சண்முகராஜன், மை.பா.நாராயணன், பிருந்தாசாரதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.