தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 80-க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த நல்ல பெயரை, புகழை 2024ம் ஆண்டு கெடுத்துவிட்டார். இனி அவரது சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று கோலிவுட்டில் ஒரு தரப்பினர் பேசுகிறார்கள். உண்மையில் நயன்தாரா மார்க்கெட் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம்
நடிகை நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு ராசியில்லாத ஆண்டு என சொல்லலாம். அவர் நடித்த ஒரு படம் கூட, 2024ம் ஆண்டு வெளியாகவில்லை. 2023-ல் தமிழில் வெளியான அவரின் அன்னபூரணி படம் ஏகப்பட்ட பிரச்னைகளை, சர்ச்சைகளை உருவாக்கியது. ஆனால், இந்தியில் அவர் நடித்த ஜவான் பெரிய ஹிட். மற்றபடி, கடந்த 2 ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும்படியாக அவரது வளர்ச்சி இல்லை.
கடந்த ஆண்டை பொறுத்தவரையில் தனுசுடன் மோதினார். நெட்பிளிக்ஸ் திருமண வீடியோ விவகாரத்தில், தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை, அவரது அனுமதியின்றி சேர்த்ததுடன், தனுஷை கடுமையாக விமர்சித்தார். அந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கிறது. நயன்தாரா செய்தது தவறு என்று பலர் சொன்னார்கள். இது வேண்டாம் என்று அவரை பலரும் தடுத்தார்கள். ஆனால், முந்தைய பகைகள் காரணமாக தனுசுடன் மோதிக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா.
கடந்த ஆண்டை பொறுத்தவரையில் குடும்பம், குழந்தைகள் கவனிப்பு, கொஞ்சம் படப்பிடிப்பு, நிறைய டூர் என நயன்தாரா நேரத்தை செலவிட்டார். ஒரு ஆங்கில ஊடக பேட்டியில், சிலரை குரங்கு என நயன்தாரா சொல்ல, அந்த விவகாரமும் பெரிதானது. பாதிக்கப்பட்டவர்கள் பல டியூப் சேனல்களில் நயன்தாராவை திட்டி தீர்த்தனர்.
இப்படியாக, 2024ம் ஆண்டு மோசமாகவே நயன்தாராவுக்கு ஓடிவிட்டது. 2025ம் ஆண்டிலும் அவர் கைவசம் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் இல்லை. மண்ணாங்கட்டி, ராக்காயி, மாதவனுடன் டெஸ்ட், யஷ் நடிக்கும் டாக்சிக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு 40 வயதை கடந்துவிட்டதால், அவருடன் ஜோடி சேர, டூயட் பாட முன்னணி ஹீரோக்கள், இளம் ஹீரோக்கள் தயங்குகிறார்கள். இதனால், நயன்தாராவின் மார்க்கெட் டல் அடிக்கிறது. இந்தியிலும் அவரால் அடுத்த படத்தில் நடிக்க முடியவில்லை. அவரும் 20 ஆண்டுகள் பிஸியாக நடித்துவிட்டதால் சினிமாவை தவிர்த்து குடும்பம், குழந்தைகள், பிஸினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்.