No menu items!

பாலா 25பாலாவின் திரைப்படங்கள் லாபமா ? சாபமா ?

பாலா 25பாலாவின் திரைப்படங்கள் லாபமா ? சாபமா ?

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா 25 ஆண்டுகளை தாண்டி வந்திருக்கிறார். சமீபத்தில் இதற்கான விழாவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வணங்கான் திரைப்படத்தின் மேடையில் வைத்து திரையுலக பிரபலங்களை வரவழைத்து பாலாவை பாராட்டி உச்சி முகர்ந்து வாழ்த்தியிருக்கிறார்.

பாலா தனது 25 ஆண்டுகளாக எடுத்த திரைப்படங்கள் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி அதிகம் பேசியிருந்தார். ஆனால் அவர் படத்தை தயாரித்த பிரமாண்ட தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் பொருளை இழந்து விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

பாலாவின் ஆரம்பகால வாழ்கைக்கு அவரது குடும்ப சூழலும் அவர் வளர்ந்த விதமும் அவரை முரட்டு குணத்துடனே உருவாக்கியிருக்கிறது. அதிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்வதற்காகவே சினிமாவில் சேர்ந்திருந்தார். கூடவே தனக்கான அடைக்கலம் வேறு எங்குமே கிடைக்காது என்கிற சூழலில்தான் சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அவருக்கு ஆரம்ப காலத்தில் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்திருந்தது நடிகர் விக்னேஷ் பாலாவின் தான் தங்கியிருந்த அறையில் பாலா சில நாட்களில் விசித்திரமாக நடத்து கொண்டிருக்கிறார்.

அதாவது காலையில் அந்த அறையில் ஒரு இடத்தை உட்கார்ந்திருந்தால் அறையில் இருப்பவர்கள் மாலையில் திரும்பி வரும் வரையில் அதே இடத்தில் அதே திசையில் அசையாமல் அமர்ந்திருப்பாராம். யாருடனும் அதிகம் பேசாமல் பல நாட்களை கழித்திருக்கிறார்.

ஒரு முறை பாண்டியராஜன் கதாநாயகனாக நடிக்க பாலுமகேந்திரா ஒரு படத்தை டைரக்ட் பண்ணுகிறார். என் இனிய பொன்நிலாவே என்ற அந்தப்படத்தில் தனி நபராக பாலுமகேந்திராவுக்கு உதவி இயக்குனராக இருந்திருக்கிறார் பாலா. இந்த படத்தில்தான் ஆனைத்து வேலைகளையும் தனி நபராக இழுத்துப் போட்டு செய்திருக்கிறார் பாலா. அப்படி அவர் கற்றுக்கொண்ட பல விஷயங்கள்தான் அவருக்கு சினிமாவை கற்றுக்கொடுத்திருக்கிறது. பாலாவின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பாலுமகேந்திரா அசோஷொயேட் டைரக்டர் பாலா என்ற பெயரை போட்டுத்தந்துள்ளார். ஆனால் பாலா இதுவரைக்கும் என் இனிய பொன் நிலாவே படத்தின் பெயரை எங்குமே சொன்னதில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

பாலாவின் சேது படத்தின் இறுதி டைட்டில் ஒலிப்பதிவின் போதுதான் நான் அவரை பிராசாத் ஸ்டுடியோவில் சந்தித்தேன். அப்போது கவிஞர் மு.மேத்தாவின் உதவியாளராக அவருடன் அடிக்கடி பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்லும் வாய்ப்ப்யுக் கிடைத்தது. அதில் கவிஞர் 2 பாடல்களை எழுதியிருந்தார். அதன் பணிகளும் அப்போது நடந்து கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் வெறும் சிலிப்பர் செப்பல் போட்டுக்கொண்டு அடையாளம் தெரியாத தோற்றத்தில் பாலா வருவார். அப்போது எனக்காக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அது எனது ஊரைசேர்ந்த காவலர் ஒருவர் செய்த சாகச நிகழ்ச்சி. எங்கள் ஊர்க்காரர் என்ற அன்பில் என்னை நன்றாகவே அறிந்திருந்தார் பாலா. அதனால் பிற்பாடு இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பால் ஈர்க்கப்பட்ட போது சின்னப் புன்னகையால் என்னை எதிர்கொண்டார் பாலா. சில நாட்களில் ராஜா சாரின் வேண்டு கோளுக்கிணங்க நானே பாலா அவர்களை போனில் அழைத்து பேசியிருக்கிறேன்.

பால எப்போதும் தனித்த குணாம்சம் கொண்டவர் என்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அவர் காலடி எடுத்து வைத்தால் அந்த இடமே அமைதி.. அமைதி… அமைதி என்று மாறிப்போகும். படப்பிடிப்பில் உதவி இயக்குனர்கள் எல்லோருக்கும் ஒரு அடையாளத்தை வைத்திருப்பார் அதை வைத்துத்தான் அவர்களை அழைப்பது வழக்கம்.

உதவி இயக்குனர்களுக்கு கதையை வாய்மொழியாக சொல்லச்சொல்ல அவர்கள் எழுதிக்கொள்வார்கள். இதுதான் பாலாவின் ரைட்டிங் ஸ்டைல். வசனத்தை இந்த காட்சியில் இப்படி வரவேண்டும் என்று அவர் சொன்னால் அதை காட்சிகளோடு விளக்கமாக எழுதி வசனத்தை யார் பேச வேண்டும் என்பதையும் தெளிவாக எழுதி கொடுப்பார்கள் உதவி இயக்குனர்கள்.

ஒரு நாள் இளையராஜாவுக்கு முன்பணம் கொடுக்க 10 லட்ச ரூபாயை நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்து அவரை பயம் கொள்ள வைத்திருக்கிறார். அவரோடு அடிக்கடி கோபம் காட்டி வெளிநடப்பு செய்வதும் உண்டு.

பரதேசி படம் எடுக்க வசதியாக பெரியகுளம் அருகில் அகமலை என்ற அடர்ந்த வனத்தில் 3 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி அதில் குடிசை செட் போட்டு படம் எடுத்திருக்கிறார். இங்கு அநாசயமாக புலி, கரடி, ஓநாய் போன்ற மிருகங்கள் உலாவும் இடம். ஒரு நாள் தன் யூனிட்டில் இருக்கும் உதவி இயக்குனர் ஒருவர் தவறு செய்து விட்டார். அவரை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அன்று படப்பிடிப்பு முடிந்ததும் மொத்த யூனிட்டும் பெரியகுளம் பகுதிக்கு திரும்பிவிட, அந்த ஒரு உதவி இயக்குரை மட்டுமே அன்று இரவு முழுவதும் அந்த காட்டிலேயே தங்கியிருக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் பாலா. இரவு முழுவதும் கடும் குளிரிலும், விலங்குகளின் பயத்திலும் உறைந்து போயிருக்கிறார் அந்த உதவி இயக்குனர் மறுநாள் யூனிட்டில் தனது சக நண்பர்களை பார்த்ததும் கதறி அழுதது பலரையும் உலுக்கி விட்டது.

அழகாக உடை அணிந்து வரும் உதவி இயக்குனர்களை கவனித்து வைத்துக்கொண்டு அவர்களை படப்பிடிப்பு நடக்காத ஒரு இடத்தில் பெரிய குழியை தோண்ட வைப்பாராம். இதில் அவர்கள் கந்தரகோலமாகி வியர்த்து மண்ணும் சேறுமாகி மாறிவிடுவார்களாம். இதன் குறிப்பை உணர்ந்து மறுநாள் டல் உடை அணிந்து வருவாராம் அந்த உதவி இயக்குனர்.

அவன் – இவன் படத்தில் ஆர்யா வழுக்கி வரும் மண் மேட்டிருந்து வழுக்கு வரும் காட்சியை மட்டும் பல நாட்கள் எடுத்திருக்கிறார். ஆனால் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் அந்த காட்சி. அதே போல இசை வித்வான் ஆனந்த் வைத்தியநாதன் நடிக்கும் காட்சியில் அவர் மாவாட்டும் காட்சியை எடுக்க இரண்டு மூட்டை அரிசியை ஊறவைத்து அதை மாவாக ஆட்டும் வரைக்கும் அவருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார் பாலா. இந்த காட்சியும் படத்தில் ஒரு இடத்தில் மட்டும் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குழந்தைகளை பாட வைத்து அவர்களை தேர்வு செய்யாமல் திட்டி அனுப்பியதோடு அவர்களை அழுவதை காட்டுவதும் அதற்கு காரணமாக ஆனந்த் வைத்தியநாதன் இருந்ததும் பாலாவை வருத்தம் கொள்ள வைத்துவிட்டதாம். அதனால் பெரிய வித்வானுக்கு சரியாக மாவாட்டக்கூட தெரியவில்லையே என்று காட்டவே அவரை இந்தக் காட்சிக்கு ஒப்பந்தம் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இவ்வளவு கடுமையான பாலா மனதில் கனிவான பகுதியும் இருக்கத்தான் செய்கிறது. பரதேசி படத்திற்காக பெரிய துணை நடிகர்கள் கூடமாக நடிக்க வந்திருந்தனர். அதில் சில பெண்கள் குழந்தைகளுடன் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அப்படி வந்த ஒரு பெண் இரண்டு குழந்தைகளை அழைத்து வந்திருந்தார். படப்பிடிப்பு நேரத்தில் இதைக்கவனித்த பாலா அந்தக் குழந்தைகளோடு விளையாட ஆரம்பித்து அவர்கள் மூலமாகவே அவர்கள் குடும்ப சூழலை தெரிந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்து போகும் போது அந்தப் பெண்ணை அழைத்து ஒரு பழைய பையில் கட்டு கட்டாக பணத்தை வைத்து கொடுத்து அனுப்பினார்.

ஒரு முறை ஒரு வார இதழில் நான் வின்னர் பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன் என்பவரை பேட்டி எடுத்து எழுதியிருந்தேன். பெரிய கோடீஸ்வரரான அவர் வின்னர் படம் எடுத்த வகையில் தன் குடும்பத்தையே இழந்திருந்தார். கடைசியாக அவரது அப்பா தங்களிடமிருந்த பாரம்பரியமான வீட்டை விற்பனை செய்த போது, வாடகை வீட்டை ஊருக்கு அப்பால் பாருய்யா அதுவும் சுடுகாட்டுக்கு அருகில் பாரு அப்பதான் உனக்கு அதிகம் செலவு இருக்காது என்று சொன்னதாக சொல்லியிருக்கிறார்.

இந்த பேட்டியைப் படித்து விட்டு இயக்குனர் பாலா அந்த தயாரிப்பாளரை பற்றி விசாரித்து அவரை அவன் இவன் படத்தில் நடிக்க வைத்து நடிகராக மாற்றினார். அவர் இப்போதும் பல படங்களில் துணை நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலா எடுத்த திரைப்படங்கள் கொஞ்சமே என்றாலும் அது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அதே சமயம் இந்த படங்கள் எல்லாம் யாருக்கு லாபத்தைக் கொடுத்தது என்றால் அது பாலாவுக்கு மட்டுமே என்பதே பதிலாக இருக்கிறது.

ஒரு தயாரிப்பாளருக்கு இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் லாபமா ? சாபமா ? என்பதை பாலாதான் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...