‘நான் ஈ’ படத்தில் வில்லனாக மிரட்டிய, கிச்சா சுதீப் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த கன்னட படம் மேக்ஸ். தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. விஜய்கார்த்திகேயா இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவும், கிச்சா கிரியேசனும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருப்பதாலும், சென்னை சுற்றுவட்டாரத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அதிக காட்சிகளை செட் போட்டு எடுத்து இருப்பதாலும், பல தமிழ் நடிகர்கள் நடித்து இருப்பதாலும் கன்னட படம் என்ற பீலிங் எந்த இடத்திலும் வரவில்லை.
ரொம்ப சிம்பிளான கதை. அதுவும் ஒரே இரவில் நடக்கும் கதை. சஸ்பெண்ட் ஆன போலீஸ் இன்ஸ்பெக்டரான கிச்சாசுதீப் ஒரு நாள் இரவில் மீண்டும் ஸ்டேஷனில் சார்ஜ் எடுக்கிறார். அப்போது மந்திரி 2பேரின், 2மகன்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி போலீசிடம் சிக்குகிறார்கள். அவர்களை லாக்அப்பில் வைக்கிறார் சுதீப். அந்த 2 இளைஞர்களையும் விடுவிக்க சொல்லி, ஏகப்பட்ட பிரஷர். ஆனால், ஒரு கட்டத்தில் 2பேரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே இறக்கிறார்கள். அவர்களை கொன்றது யார்? மந்திரி கம் அவர்களின் அடியாட்களால் போலீஸ் சூறையாடப்படும்போது என்ன நடக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டரான கிச்சா சுதீப், என்ன முடிவெடுக்கிறார். தனது சக போலீஸ்காரர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறு ஆக் ஷன் கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஒரு நாள் இரவில் கதை நடப்பதால், பெரிய அளவில் கலர்புல் சமாச்சாரங்கள், ஹீரோயின், காதல், காமெடி இல்லை. ஆனால், திரைக்கதை, திருப்பங்கள், வசனங்கள், சண்டைக்காட்சிகள் படத்துக்கு பிளஸ். குறிப்பாக, ஹீரோவின் நடிப்பு, கிளைமாக்சில் அவர் போடும் அதிரடி சண்டை காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிறது. சேகர் சந்திரா கேமரா ஆங்கிள், பல ஷாட்டுகள், அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை படத்துக்கு பலம்.
சற்றே நெகட்டிவ் ரோலில் வருகிறார் வரலட்சுமி. புஷ்பா வில்லன் சுனிலுக்கு நல்ல கேரக்டர். சரத்லோகிதாஸ், ஆடுகளம் நரேன் மந்திரிகளாக வருகிறார்கள். இவர்களை தவிர, போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளாக வரும் இளவரசு மனதில் நிற்கிறார். கடைசி அரை மணி நேரம் அவர் பேசும் வசனம், அவர் நடிப்பு செம. கைதி, வேதாளம் படங்களின் சீன்கள் அவ்வப்போது வந்தாலும், ஒரே நாளில் நடக்கும் கதை, பரபரப்பான போலீஸ் ஸ்டேஷன் சீன்கள், ஹீரோயிசம், வசனங்கள், அதிரடி ஆக் ஷன் காட்சிகளால் படத்தை போரடிக்கவிடாமல் நன்றாக ரசிக்க வைக்கிறார் இயக்குனர் விஜய்கார்த்திகேயா.