5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்த முறை அமலில் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிவு அடைந்த மாணவர்கள் கல்வி கற்கும் விதத்திலும், கிராமபுறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளி கல்வி கிடைக்கும் வகையில், இடைநிற்றலை தடுக்கும் வகையில், கட்டாய தேர்ச்சி முறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த நடைமுறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு 2 மாதங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் எனவும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை மேல் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.இதேநேரம், தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் இடையிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ராமதாஸ் கண்டனம்
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.
மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். 5 அல்லது 8-ஆம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள். அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு 2020-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதைக் கண்டித்து அந்த ஆண்டுட ஜனவரி 28-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாமகவுடன் பேச்சு நடத்திய அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் நிலை என்ன?
மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பெற்றோரும் இதுதொடர்பாக குழப்பமடையத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் நிலையில் மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய அரசு பள்ளிகள் தவிர்த்த பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது. பெற்றோரும் மாணவர்களும் ஆசிரியர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்” என்று கூறியிருக்கிறார்.