ரஜினிகாந்த் நடித்த பல படத்தலைப்புகளில், கடந்த காலங்களில் பல படங்கள் உருவாகின. அந்தவரிசையில், இப்போது மிஸ்டர் பாரத் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
இப்படத்தை நிரஞ்சன் இயக்குகிறார். இதென்ன தலைப்பு என்று இயக்குனரிடம் கேட்டால், ‘‘கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகர்வதால் இந்த தலைப்பு. இன்னும் சொல்லப்போனால் பைனலி என்ற யூடியூப் மூலம் பிரபலமான பாரத் ஹீரோவாக நடிக்கிறார். அவர் பெயருக்கு ஏற்ற தலைப்பு இது. காதல் திருமணத்தை விரும்புகிறான் பிடிவாத குணம் கொண்ட ஹீரோ. அப்போது அவனிடம் ஒரு பெண் தன் காதலை சொல்கிறாள். ஆனால், அவனால், அதை உணரக் கூட முடியவில்லை. ஏன் என்பது கதை. இது ஜாலியான பொழுதுபோக்கு படம். சம்யுக்தா விஸ்வநாதன், பாலசரவணன், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்க, பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது ’’என்கிறார்.
‘‘மிஸ்டர் பரத் என்ற தலைப்பு ஏவி.எம் நிறுவனத்திடம் இருக்கிறதே’’ என்று கேட்டதற்கு, ‘‘முறைப்படி அவர்களின் பேசி, சட்டப்படி தலைப்பை வாங்கி விட்டோம். அதனால், எந்த பிரச்னையும் இல்லை ’’என்கிறார் இயக்குனர்.
ஏவி.எம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா உட்பட பலர் நடித்த படம் மிஸ்டர் பாரத். 1986-ல் ரிலீஸ் ஆனது. இளையராஜா இசையில் ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா’, ‘என் தாயின் மீது ஆணை’, ‘பச்சைமிளகாய் காரமில்லை’ போன்ற பாடல்கள் பிரபலம் ஆகின. தன்னை விட சில வயது குறைந்த ரஜினிகாந்த் தந்தையாக அப்போது நடித்தார் சத்யராஜ். ரஜினிகாந்த், சத்யராஜ் சம்பந்தப்பட்ட சில சீன்கள் இப்போதும் பிரபலம். இந்த மிஸ்டர் பாரத்தில் பழைய படத்தில் இடம் பெற்ற பாடலின் ரீமேக் இருக்குமா என தெரியவில்லை.
தர்மதுரை, விடுதலை, குருசிஷ்யன், போக்கிரிராஜா, மாப்பிள்ளை, ராஜாதிராஜா, மாவீரன், ராஜாதிராஜா, வேலைக்காரன், படிக்காதவன், பாயும்புலி, தில்லுமுல்லு, நெற்றிக்கண், முரட்டுக்காளை, தீ, காளி, பொல்லாதவன், கழுகு, நான் மகான் அல்ல, நினைத்தாலே இனிக்கும், பில்லா, மனிதன், தங்கமகன் ஆகிய ரஜினிகாந்த் தலைப்புகளில் பிற்காலத்தில் படங்கள் வந்துள்ளன.