வசதி படைத்த தம்பதியான மேத்யூ வர்கீஸ் மற்றும் அனுபமா குமாருக்கு மகனாக வருகிறார் ஹீரோ அன்சன் பால். எந்த வேலைக்கும் செல்லாமல், தனது பெற்றோர்களின் பணத்தில் நண்பர்களுடன் குடி, ஊர் சுற்றுதல் என்று சுற்றி வருகிறார் அன்சன்.
அமெரிக்காவில் சென்று வேலை பார்த்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர் தான் நாயகி ரெபா ஜான்.
ரெபா ஜானை முதல் முறை கண்டதும், அவரது அழகில் மயங்கி அவர் மீது காதல் வயப்படுகிறார் நாயகன் அன்சன். சில நாட்கள் ரெபாவை பின் தொடர்கிறார். ஒருநாள், ரெபாவிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.
காதலை ஏற்க மறுக்கிறார் ரெபா. உங்களுக்கு என் மீது காதல் வரும் வரை காத்திருப்பேன் என்று ரெபாவிடம் கூறி அவரிடம் இருந்து தள்ளிச் செல்கிறார் அன்சன்.
நாட்கள் கடந்து செல்ல, அன்சனின் ஒரு சில நல்ல குணத்தைக் கண்டு அவர் மீது ரெபாவும் காதல் வயப்படுகிறார். தனது காதலை அன்சனிடம் கூற நினைக்கையில், இருவரும் ஒரு அதிபயங்கரமான விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் கதை.
அன்சன் பால் நல்ல உடல்வாகு முக லட்சணத்துடன் இருக்கிறார். நடிப்பும் இயல்பாக வருகிறது. அவருக்கு இன்னும் நல்ல வாய்ப்புக் கிடைத்தால் வெற்றி பெறுவார். நாயகி ரெபெக்கா ஜான் வழக்கம்போல் அழகாக வந்து மனதில் இடம் பிடிக்கிறார். பல இடங்களில் அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. குறிப்பாக மருத்துவமனை காட்சி, க்ளைமேக்ஸ் காட்சியில் மருத்துவமனை உடையோடு ஒடி வரும் இடம் ரொம்பவும் ரிஸ்க் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
அனுபமா குமார், வர்கீஸ் நடிப்பு படத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது. மகன் மீது காட்டும் அக்கறையும், சுதந்திரமும் ரசிக்க வைக்கும் இடம். இதேபோல ரெபெக்கா பெற்றோர் காட்டும் இந்த கால அணுகு முறை ஓகே. நண்பர்களாக வரும் பாத்திரங்களும் பலமாகவே இருக்கிறார்கள்.
புதிய இயக்குனர் சுரேஷ் குமாரின் வித்தியாசமான திரைக்கதை படத்தை எதிர்பாராத இடத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் இடம். நம்பிக்கை தரும் இயக்குனர்.
ஜே.கல்யாண் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறதுது. சாலை விபத்தை பதிவு செய்தவிதம் அதிர்ச்சி. விஷ்ணு பிரசாத் இசையில் பாடல்கள் மெல்லிசை ரகம். பின்னணி இசை படத்தை நன்றாகவே நகர்த்துகிறது.
பல படங்களில் பார்த்த அதே காதல் காட்சிகள் வேகத்தை குறைக்கிறது. புதிய கதை சொல்லல் மூலம் படத்தை ரசிக்க வைத்த இயக்குனர் சுரேஷ் குமாரை பாராட்டலாம். காலம் கடந்து வந்திருக்கும் காதல் கதை.