ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி நடிக்கும் ‘கேம்சேஞ்சர்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள டல்லாஸில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படம் ஒன்றின் முன் வெளியீட்டு நிகழ்வு அமெரிக்காவில் நடப்பது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் பேசியதாவது…
நாங்கள் இந்தியாவை விட்டுப் போகவே இல்லை என்பது போல் இந்த நிகழ்வு இருக்கிறது. நான் ஷங்கரின் படத்தில் நடித்துள்ளேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு தெலுங்குப் படத்தை இயக்க வேண்டும் என்று நான் நெடுநாட்களாகக் கனவு கண்டேன், ஆனால் அது நடக்குமென நான் நினைக்கவே இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றிய, இந்த மூன்று வருடங்கள் நான் நிறையக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக ஒரு அழகான பயணமாக அமைந்தது.
என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டில் சச்சின் எப்படிப்பட்டாரோ, அதே போல் தான் இந்திய சினிமாவுக்கு ஷங்கர் சார். அவர்தான் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குநர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் தனியாக நடித்து வெளியாகும் முதல் படம், என்பது கேம்சேஞ்சர் படத்தின் சிறப்பு. இந்த நிகழ்வில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் கலந்துகொண்டது கூடுதல் மகிழ்ச்சி.
இவ்வாறு ராம்சரண் பேசினார்.
இயக்குனர் ஷங்கர் பேசும்போது, “என் 30 ஆண்டுகால திரை வாழ்க்கையில் தெலுங்கு ரசிகர்கள் அளித்து வரும் அன்பிற்கு நன்றி. கடந்த 30 ஆண்டுகளாக நான் நான் நேரடி தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர்.. ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தில் மூன்று கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளார். நான் அறிமுகப்படுத்திய தமன் இசையமைத்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தில்ராஜூ தயாரித்துள்ளார்’’ என்றார்.