திரையுலகில் கடந்த 47 ஆண்டுகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் மோகன்லால் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டுகிறது. இந்நிலையில், அவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் பரோஸ். இப்படத்தில் அவரே பூதமாக நடித்துள்ளார், டிசம்பர் 25ல் பல்வேறு இந்திய மொழிகளில் படம் ரிலீஸ்.
சென்னையில் நடந்த பரோஸ் படத்தின் விழாவில் மோகன்லால் பேசியதாவது…
என் இத்தனை ஆண்டு அனுபவத்தை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளேன். படம் இயக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று பலரும் கேட்கிறார்கள். நான் படம் இயக்குவேன் என நினைத்து பார்க்கவில்லை. அதுவே அமைந்துவிட்டது.
பரோஸ் 3டி படமாக அமைந்துள்ளது. இது குழந்தைகளுக்கான படமல்ல, ஆனால், குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பேன்டஸி அட்வென்சர் ஆக கதை உருவாகி உள்ளது. கரோனா காலத்திற்குமுன்பு படத்தை உருவாக்கினோம். இப்போதுதான் ரிலீஸ் செய்கிறோம். 3டி படம் என்பதால் 2 கேமரா கொண்டு படப்பிடிப்பு நடத்தினோம். சின்ன தவறு நடந்தால்கூட, பார்வையாளர்களுக்கு கண்வலி , தலைவலி வந்துவிடும். அதனால், ரொம்பவே கவனமாக படப்பிடிப்பு நடந்தினோம். டால்பி அட்மாஸ் ஆடியோ பார்மேட்டில் படம் வருகிறது
13 வயது சிறுவனாக இருந்தபோது லிடியன் இந்த படத்துக்கு இசையமைக்க வந்தார். இப்போது வளர்ந்துவிட்டார். அவரும், அவர் தந்தையும் பலமுறை கேரளா வந்து இந்த படத்துக்காக பணியாற்றினார்கள். நானும் இந்த படத்தில் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன்.
ஹாலிவுட்டை சேர்ந்த ஒருவர் பின்னணி இசை அமைத்துள்ளார். உலக அளவில் சிறந்த ஒளிப்பதிவாளரான சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல தேசியவிருதுகளை பெற்றவர். சிறந்த கலைஞர்களை நாங்கள் படத்தில் கொண்டு வந்துள்ளோம்.
கதை வெளிநாடுகளில் நடப்பதால் போர்ச்சுகள், ரஷ்யா, கிரீஸ், பிரிட்டிஷ், ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். இந்திய கலைஞர்கள் சிலரே நடித்துள்ளனர். அனைத்து மனிதர்களுக்குள்ளேயும் ஒரு குழந்தைத்தனம் இருக்கிறது. அது இந்த படத்தில் வெளிப்படும்.
இப்படம் முழுக்க ஒரு அனிமேஷன் கேரக்டர் வருகிறது. ஒரு கதாபாத்திரத்துடன் அந்த கேரக்டர் படம் முழுக்க வருகிறது. அதை கொண்டு வர, ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஒருவரை வைத்து அந்த கேரக்டரை உருவாக்கி, உணர்ச்சிகளை கொண்டு வந்து. அதை அனிமேஷன் ஆக மாற்றினோம். ஒரு அண்டர்வாட்டர் சாங் படத்தில் முக்கியமான இடத்தில் வருகிறது. பல வாரங்கள், ஏகப்பட்ட உழைப்பில் அதை உருவாக்கினோம். துபாய் மாலில் அந்த பாடலை வெளியிட்டோம்.
புலிமுருகன் படத்தில் இருந்து என் பட தமிழ் பதிப்புகளை, ஆர்.பி.பாலா கவனிக்கிறார். இந்த படத்துக்கும் அவர் பங்களிப்பு இருக்கிறது. தியேட்டருக்கு வந்து இந்த மாஜிக் எக்ஸ்பிரயன்சை பார்வையாளர்கள் ரசிக்கணும். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். வரும் 25ம் தேதி இந்த படத்தை பார்த்து ரசிக்கணும். கடவுள் அனுமதித்ததால் இந்த படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சென்னையில் சந்திப்போம்.’