No menu items!

அல்லு அர்ஜூன் – என்ன பிரச்சினை?

அல்லு அர்ஜூன் – என்ன பிரச்சினை?

அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த புஷ்பா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் உருவானது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஹைதரபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக நள்ளிரவு முதல் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். அதோடு, புஷ்பா 2 படத்தை தனது குடும்பத்தோடு பார்க்க அல்லு அர்ஜூனும் சந்தியா திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார். இதனால், திரையரங்கு முன்பு அதிக ரசிகர்கள் கூடினர்.

கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது 9 வயது குழந்தை மூளைசாவடைந்து கோமாவில் சிகிச்சைப் பெற்று வருவதும் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அல்லு அர்ஜூன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவர் கூறியதாவது,

ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு புஷ்பா2 படத்தில் நடித்தேன். இதனால், படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்க திரையரங்கு சென்றேன். கடந்த 20 ஆண்டுகளாக 30 சினிமா வெளியானபோது. முதல் நாளே அதே தியேட்டரில் சென்று படம் பார்த்துள்ளேன். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத விபத்து நடந்துள்ளது.

கூட்டம் அதிகமாக இருந்தால் போலீசார், அவர்களை நோக்கி கை காட்டினால் சென்றுவிடுவார்கள் என்று சொன்னார்கள். இதனால், கை காட்டிவிட்டு சென்றுவிட்டேன். ஆனால், படம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே கூட்டம் அதிகமாக இருக்கிறது என்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்படுவதால், வெறுயேறும்படி பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே அங்கிருந்து நான் எனது மனைவி குழந்தைகளுடன் சென்றுவிட்டேன். ஆனால், இந்த நெரிசலில் சிக்கி, ஒரு ரசிகை இறந்ததும் அவரது மகன் கோமா நிலைக்கு சென்றதும் எனக்கு மறுநாள் காலை தான் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் என்று கூறினார்.

இந்தநிலையில் தான் அல்லு அர்ஜூன் வீட்டின் முன்பு திரண்ட ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென்று தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். கல் வீசியும், அங்கிருந்த பூந்தொட்டிகளையும் தூக்கி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், ரேவதி குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தத் தாக்குதல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் உணர்ச்சிகளை பொறுப்புடன் வெளிப்படுத்துங்கள். “தயவுசெய்து அருவருப்பான செயல்களில் ஈடுபடாதீர்கள். சமூக ஊடகங்களில் போலி ஐடிக்கள் மூலம் எனது ரசிகர் என்று சொல்லிக்கொண்டு தவறாக பதிவுகளை வெளியிட வேண்டாம். அவ்வாறு பதிவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...