இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே கடந்த 2023-24 நிதியாண்டில் அதிக வரி கட்டியவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். கடந்த நிதியாண்டில் அவர் 66 கோடி ரூபாயை வரியாக கட்டியுள்ளார்.
கடந்த 2023-24 நிதியாண்டில் அதிகமாக வருமான வரி கட்டிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 66 கோடி ரூபாயை வரியாக கட்டி முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் இந்திய அணிக்காக ஆட 7 கோடி ரூபாயையும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆட 15 கோடி ரூபாயையும், விலம்பரங்களில் நடிக்க 252.72 கோடியையும் அவர் சம்பாதித்துள்ளார்.
அவருக்கு அடுத்ததாக மகேந்திர சிங் தோனி 38 கோடி ரூபாயை வருமான வரியாக கட்டியுள்ளார். அவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட 15 கோடி ரூபாயையும், விளம்பரங்களில் நடிக்க 135.93 கோடி ரூபாயையும் சம்பளமாக வாங்கியுள்ளார்.
அதிக வரி கட்டிய கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தைப் பிடிக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து அவர் விளம்பரப் படங்களில் நடித்து பணத்தைக் குவித்து வருவதே இதற்கு காரணம்.
விளம்பரப் படங்களில் நடிப்பதன் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் 50 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை அணிக்கு மெண்டராக இருப்பதன் மூலமும் அவர் பலகோடி ரூபாயைச் சேர்த்துள்ளார். இவற்றைத் தவிர ஏற்கெனவே இவர் செய்துள்ள முதலீடுகளில் இருந்தும் பல கோடி ரூபாய் வருவாயாக கிடைத்து வருகிறது. இப்போதைக்கு அவரது நிக சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரைப் போலவே மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியும் இந்த டாப் டென் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவருக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. அவர் 23 கோடி ரூபாயை வருமான வரியாக கட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக, கடந்த ஆண்டில் இருந்தபோது பலகோடி ரூபாயை அவர் சம்பளமாக பெற்றுள்ளார். இதைத்தவிர விளம்பரங்களில் நடிப்பது, கிரிக்கெட் தொடர்களின் வர்ணனையில் ஈடுபடுவது போன்ற விஷயங்களுக்காகவும் அவர் பல கோடி ரூபாயைச் சம்பாதித்துள்ளார்.
13 கோடி ரூபாயை கடந்த ஆண்டில் வரியாக செலுத்திய ஹர்த்திக் பாண்டியா இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 80 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 6 முதல் 10-வது இடம் வரை பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள்…
ரிஷப் பந்த் (ரூ.10 கோடி)
அஜிங்க்ய ரஹானே (ரூ.8 கோடி)
பும்ரா (ரூ.7 கோடி)
ஷிகர் தவன் (ரூ.6 கோடி)
கே.எல்.ராகுல் (ரூ.5 கோடி).