திரைத்துறையில் மாற்றங்கள் நிகழ்த்தும் துடிப்பான தலைமுறையின் வெற்றிமுகம், வெற்றிமாறன். தொடர்ந்து திரைப்பட இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என ஓய்வில்லாமல் இருக்கும் வெற்றிமாறன் ‘அதிர்வு’ என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். ‘அதிர்வு’ பதிப்பகத்தின் முதல் புத்தகம், ‘ஓநாய் குலச்சின்னம்’. ஜியாங் ரோங் என்ற சீன எழுத்தாளர் எழுதிய Wolf Totem நாவலின் மொழிபெயர்ப்பு இது. தமிழில் எழுத்தாளர் சி. மோகன் மொழிபெயர்த்துள்ளார்.
‘புத்தகங்கள்தான் என் வாழ்வில் பெரும் பாதிப்பைத் தந்தன. என் வளர்ச்சியின் ஆதாரமாக இருந்தது வாசிப்புதான். நேரம் கிடைக்கும்போது வாசித்துவிடுகிறேன். நண்பர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களையும் வாசித்துவிடுகிறேன். ஒரு புத்தகத்தைக் குறைந்தபட்சம் 3 மாதங்களில் முடித்துவிடுவேன்.
பயணத்தின்போது எனது பையில் அதிகம் இடம் பெறுவது புத்தகங்கள்தான். இணக்கமான சூழலில் புத்தகங்களை வாசித்துவிடுவேன். கழிப்பறையில் கூட புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு.
ஜியாங் ரோங் எழுதிய Wolf Totem, அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots: The Saga of an American Family, மரியோ வர்கஸ் யோஸா எழுதிய The Feast of the Goat போன்ற புத்தகங்கள் என் வாழ்க்கையை வடிவமைத்தவை” என்கிறார் வெற்றிமாறன்.
இவர் வெளியிட்ட, ஜியாங் ரோங் எழுதிய Wolf Totem நாவல் மொழ்பெயர்ப்பு குறித்து இலங்கை எழுத்தாளர் பெளஷர் எழுதியுள்ள விமர்சனம் இனி…
‘‘ஓநாய் குலச்சின்னம்’ மேய்ச்சல்நில வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்றுப் புனைவு. சுய வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் மிகவும் அற்புதமான படைப்பு.
இளைஞர்களும் மாணவர்களும் மலைப்பகுதிகளுக்கும் கிராமப்புறங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களோடு இணைந்து வாழ்ந்து உழைக்க வேண்டும் என்று சொன்னார் மாவோ. அவர் சொன்ன இந்த சிந்தனையை ஏற்று உள்மங்கோலியாவின் மிகவும் தொன்மையான மேய்ச்சல் நிலத்துக்கு, பழைய சிந்தனை, பழைய கலாசாரம், பழைய சடங்குகள், பழைய பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நீக்கி, புரட்சி சிந்தனை உள்ள 4 சீன மாணவர்கள் அனுப்பப்படுகிறார்கள் . அதில் இருவர் ஆடு மேய்ப்பர்களாகவும் ஒருவன் மாடு மேய்ப்பனாகவும் ஒருவன் குதிரை மேய்ப்பனாகவும் – மேய்ச்சல் தொழிலைத் தொடங்குகிறார்கள். இவர்களில் ஒருவனான ஜென் செனும் ஓநாயும்தான் நாவலைக் கொண்டு செல்கின்றனர்.
ஜென் சென் அங்கு 11 வருடங்கள் தங்கியிருக்கிறான். மேய்ச்சல் நிலத்தில் எப்படி ஓநாய்களுடன் அந்த நாடோடி மக்கள் வாழ்கிறார்கள்? அவர்களின் கடவுள் யார்? அவர்களுடைய மிகக் கடினமான வாழ்க்கைமுறை, அவர்களின் பண்புகள், அவர்களது உணவு, வியாபாரம், பருவகாலத்திற்கேற்ற இடமாற்றம், அவர்களது வேட்டையாடும் தந்திரங்கள் இப்படியாகப் பல விடயங்களையும் மிக உன்னிப்பாக உற்று நோக்குகிறார்.
பில்ஜி என்பவர்தான் ஜெனின் குருவாகவிருந்து எல்லாவிதமான நெறிமுறைகளையும் கற்பிக்கிறார். இங்குள்ள மேய்ச்சல் நிலத்துக்கு சொந்தமான விலங்குகள் என்றால் அவை ஓநாய்களும் ஆடுகள், மாடுகள், குதிரைகள், நாய்கள். ஆனால், மேச்சல் நிலத்தை அழிப்பவை என்றால் அவை மான்கள், நரிகள், மர்மோட்டுக்கள், எலிகள் தான்.
மங்கோலியர்கள் ஓநாயை தங்கள் குலச் சின்னமாக நினைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம், நிலத்தில் விளையும் பயிர்களை மான்களும் மரமோட்டுகளும் எலிகளும் நாசப்படுத்தி விடுவதால் அங்குள்ள மக்கள் பட்டினியால் கஷ்டப்பட நேரிடும். ஓநாய்கள் அவற்றை தகுந்த முறையில் வேட்டையாடுவதால் பயிர்கள் காக்கப்படுகின்றன. ஆனால், இதில் சோகம் அவர்களின் மந்தைகளும் குதிரைகளும் குறந்தளவில் ஓநாய்களுக்கு இரையாகின்றன என்பதே.
மங்கோலியர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். தந்தையை டெஞ்ஞர் என்றும் மேச்சல் நிலத்தைத் தாய் என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்னொரு இடத்தில் டெஞ்ஞரிடம் போவதென்றால் அதை சொர்க்கத்திற்கான அழைப்பு என்று மிக தீவிரமாக நம்புகிறார்கள். அவர்களின் மேய்ச்சல் நிலத்தில் கடும் பனி அல்லது வறண்ட புயல், மழை இவை மிக மோசமாக இருக்கும் காலங்களில், டெஞ்ஞர் மிகவும் கோபமாக இருக்கின்றார் அதனால்த் தான் இப்படி நடக்கிறது என்ற நம்பிக்கை உடையவர்கள்.
இறந்தவர்களின் உடல்களை அவர்கள் எரிக்கவோ அல்லது தாக்கவோ மாட்டார்கள். பதிலாக அதனை ஓலான்புலாக்கின் மிக உயர்ந்த மலைகளில் வைத்துவிட்டு வருவார்கள். பின் அதனை ஓநாய்கள் சாப்பிடும் அல்லது அங்கு வாழும் இராட்சதக் கழுகுகள் ஒருபகுதியும் விடாமல் சாப்பிடு முடித்தால் அந்த உடலுக்குரியவர் டெஞ்ஞரிடம் சென்றுவிடதாக டெஞ்சருக்கு நன்றி தெரிவிப்பார்களாம். மிகவும் அழுகிய மாமிசத்த்க்கூட ஓநாய்கள் சாப்பிடுமாம். கோடைகாலப் பருவத்தில் ஓநாய்கள் மிருகங்களை வேட்டையாடி குகைகளுக்குள் ஒழித்துவைத்து பின் பனி காலங்களில் அவற்றை உண்டு வாழும் என்று விபரிக்கிறார் ஜியோங் ரோங்.
உலகத்தையே உலுக்கிய சில மன்னர்களில் ஜெங்கிஸ்கானும் ஒருவன். அவன் பல விதமான போர் தந்திரங்களைக்கூட இந்த ஓலோன்புலாக் ஓநாய்கள் மூலமாகவே கற்றான். ஐரோப்பிய, பாரசீக, ரஷ்ய, நாடுகளையே வென்று ஆட்சி அமைத்ததற்கு மங்கோலிய ஓநாய்களிடமும் குதிரைகளிடமும் இருந்து கற்றதே காரணம் என்று எழுதுகிறார் ஆசிரியர்.
மங்கோலியரவிற்கு 1967இல் தான் ஜென் சென் சென்றார். அப்போ கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு முன் அவர்களுடைய வியாபாரம் சிறிதளவேனும் பண்டமாற்றாகவும் சிறிதளவு பணத்துடனும் இருந்ததை எப்படி என்று விபரிக்கிறார் ஜென். அவர்களின் உணவில் இறைச்சியின் பங்கே முதலிடம் வகித்தது. ஓநாய்கள், மான்கள், மர்மோட்டுக்கள், ஆடுகள் இவற்றின் தோல்களை விற்று கிடைக்கும் பணத்துடன் சிறு தானியங்களும் தான் இவர்களின் வருமானம்.
இங்கே ஜென் சென்னும் ஒரு ஓநாயை எடுத்து வளர்க்கிறார். எப்படி அதனை எடுத்து வளர்க்கிறார், அதனுடன் ஏற்படும் பிரச்சனைகள், கடைசியில் என்ன முடிவாக அமைகிறது போன்ற மிக சுவாரஸ்யமான பல தகவல்களை அறிய நாவலைப் படியுங்கள்.
ஜென்னும் யாங்கும் 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் உள்மங்கோலியாவிற்குச் சென்று பார்த்தபின் அங்கு நிலமை மிகவும் மாறுபட்டிருப்பதை கண்டு மனம் வருந்தினார்கள். இங்கும் சில அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததை அவர்கள் உணர்ந்தார்கள். அங்கு நிர்வாக மாற்றம் காரணமாக ஓநாய்கள் அழிக்கப்பட்டு மர்மோட்டுக்களும் எலிகளும் அதிகமாகக் காணப்பட்டதாக ஜென் சென் கூறுகிறார்.