பிரான்ஸ் நாட்டில் பல்வேறு ஆண்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 72 வயதான டொமினிக் பெலிகாட் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். என்ன நடந்தது விரிவாக பார்ப்போம்…
வணிக வளாகங்களில் பெண்களை ஆபாசமாக படமெடுத்தற்காக ஃப்ரான்ஸ் நாட்டில் மசான் என்ற கிராமத்தில் 72 வயது முதியவரான டொமினிக் பெலிகாட் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சந்தேகத்தின் பெயரில், அவனுடைய வீட்டை போலீசார் சோதனையிட்டு, கம்யூட்டரை சரிபார்த்தபோது அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்கள்.
தன் மனைவிக்கு போதை மருந்தை கொடுத்து, கடந்த 10 வருடங்களாக பலரை தன் மனைவி கிசெல் பெலிகாட்டை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார், டொமினிக் பெலிகாட். ஏறத்தாழ 75 நபர்கள், 200 முறைக்கு மேல் அந்த பெண்மணியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்கள். அதையும் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி விருப்பமுள்ளவர்கள் இந்த பாலியல் பலாத்காரத்தில் பங்கேற்கலாம் என பலரிடம் உரையாடியுளார். இந்த இணையதளத்தை மாதம் 7 – 8 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளார்கள். இதில் ஈடுபட்ட 75 நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த இணையத்தில் ஆயிரக்கணக்கான பேர் தங்கள் மனைவியையும் இது மாதிரி நடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்கள் என்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பாலியல் பலாத்காரம் 10 வருடங்களாக நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உண்டு. தங்கள் தந்தை இவ்வளவு கொடூரமானவன் என அறிந்து புத்தி பேதலித்து நிற்கிறார்கள், குழந்தைகள்.
இவர்களின் மூத்த மகள் (50 வயது) போன வருடம் இந்த சம்பவம் தொடர்பாக ‘And I Stopped Calling You Dad’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டு பகிங்கிரங்கப்படுத்தினார். பாதிக்கப்பட்ட அம்மணி இந்த குரூர சம்பவம் உலக முழுவதும் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்திடம் இந்த வழக்கை பொதுமக்கள் முன்னிலையில் பகிங்கரமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஃபிரான்ஸ் நீதிமன்றம் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டது.
உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள், மனித உரிமைக்கு போராடுகிறவர்கள் பலர் பாதிக்கப்பட்ட கிசெல் பெலிகாட்டுக்கு ஆதரவாக நின்றார்கள். மனோத்துவ நிபுணர்களும் இந்த வழக்கை கூர்மையாக கவனித்து வந்தார்கள்.
ரேப் (Rape) என்ற குரூரத்தின் கோணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி கிசெல் பெலிகாட் நீதிமன்றத்தில் கூறியதை ஃபிரான்ஸ் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் தொழிற்நுட்பம் இந்த வக்கிரங்களை வளர்க்கிறது என்ற வாதங்கள் வலுப்பெற்றுள்ளன. மானுடகுல வரலாற்றில் இம்மாதிரியான குரூர சம்பவம் நடந்ததில்லை என பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த வழக்கு பிரான்ஸ் நாட்டு மக்களை கொதிப்படைய செய்தது. அதனால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டம் என பலரும் தெரிவித்தனர். இந்நிலையில், இது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மனித உரிமை நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆணாதிக்கத்தை ஒடுக்கும் நேரம் இது என பாதிக்கப்பட்ட கிசெல் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த போது உலக அளவில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிசெல் பெலிகாட், துணிவின் அடையாளமாக தற்போது பார்க்கப்படுகிறார். சுமார் மூன்று மாத காலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 51 பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
இந்த வழக்கில் தனது குற்றத்தை டொமினிக் பெலிகாட் ஒப்புக் கொண்டார். அதனால் அவர் ஏற்கெனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று (19-12-24) தண்டனை விவரத்தை நீதிமன்றம் வெளியிட்டது. அவருடன் சேர்த்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கு மூன்று முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இது பாதிக்கப்பட்ட கிசெல் பெலிகாட்டின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கோரிய தண்டனை காலத்தை காட்டிலும் குறைவாகும். இதில் இருவரது தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.