சென்னை சர்வதேச 22வது திரைப்பட விழா நேற்று நிறைவடைந்துள்ளது. இதில் 180 படங்கள் திரையிடப்பட்டன. தமிழ்பிரிவில் மகாராஜா, அமரன், லப்பர்பந்து, ஜமா ஆகிய படங்களுக்கு விருது கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி, சாய்பல்லவி. அட்டக்கத்தி தினேஷ், துஷாராவிஜயன் ஆகியோரும் விருது பெற்றனர்.
கடந்த டிசம்பர் 3ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடந்த, சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் நிறைவு நாளில் சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டன. அதன்படி, சிறந்த படத்துக்கான விருதை அமரன் பெற்றது. அந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு லட்ச ரூபாயுடன் விருது பெற்றார். இரண்டாவது சிறந்த படமாக லப்பர் பந்து தேர்வானது. அந்த பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துக்கு ரூ 50 ஆயிரம் விருது கொடுக்கப்பட்டது. சிறப்பு ஜூரி விருது, ஜமா படத்தை இயக்கிய பாரி இளவழகனுக்கு கொடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக மகாராஜா படத்தில் நடித்த விஜய்சேதுபதியும், சிறந்த நடிகையாக அமரன் படத்தில் நடித்த சாய்பல்லவியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமரன் ஒளிப்பதிவாளர் சாய்,, மகாராஜா பட எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அமரன் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பெற்றார்.
வாழை திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான விருதை பொன்வேல் வாங்கினார்.
சிறந்த துணை நடிகர் விருது, லப்பர் பந்து படத்திற்காக தினேசுக்கும் வேட்டையன் படத்துக்காக துஷாரா விஜயனுக்கு சிறந்த துணை நடிகர் விருது தரப்பட்டது. சமூக பிரச்சனைகள் குறித்த சிறந்த திரைப்படத்திற்கான விருதை, நந்தன் படத்திற்காக இரா சரவணன் வாங்கியுள்ளார். சிறப்புக் குறிப்பு ஜூரி விருது – வாழை படத்திற்காக மாரி செல்வராஜ், தங்கலான் படத்துக்காக பா.ரஞ்சித் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை, ரசவாதி படத்துக்காக அர்ஜூன் தாசும், பேவரைட் நடிகருக்கான விருதை அரவிந்த்சாமியும், பேவரைட் நடிகை விருதை அன்னாபென்னும், சிறப்பு ஜூரி விருதை கோழிப்பண்ணை செல்லத்துரை படத்துக்காக சீனுராமசாமியும், சிறந்த ஜூரி விருதை போட் படத்துக்காக யோகிபாபுவும் பெற்றனர். சிறந்த கதைக்கான விருதை மகாராஜா படத்துக்காக நித்திலன் பெற்றார். சிறந்த பொழுது போக்கு படமாக வேட்டையன் தேர்வானது
விழாவில் பேசிய சாய்பல்லவி ‘‘ஒரு நடிகைக்கு நல்ல டைரக்டர், நல்ல கேரக்டர் தேவை. அமரன் படத்தில் அது கிடைத்தது. அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. கடந்த 1 மாதமாக அமரன் படத்துக்காக அவ்வளவு அன்பு, பாராட்டு கிடைக்கிறது. தமிழக, கேரளா, தெலுங்கு என அனைத்து பகுதிகளில் இருந்தும் அது கிடைக்கிறது’ என்றார். சிறந்த நடிகர் விருது பெற்ற விஜய்சேதுபதி ‘‘சென்னை திரைப்பட விழாவில் பல படங்களை பார்த்து இருக்கிறேன். இதே விழாவில் இப்போது 2வதுமுறையாக விருது வாங்கியிருக்கிறேன். இந்த விருதுக்கு காரணம் மகாராஜா பட இயக்குனர் நித்திலன்’’ என்றார். ‘‘சென்னை திரைப்படவிழாவில் நான் ஆரண்ய காண்டம் படத்தை பார்த்தேன். இந்த விழாவில் விருது கிடைத்துள்ளது. நன்றி. படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வர முடியவில்லை. எங்கள் குழுவுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்’’ என்று அமரன் படத்துக்காக விருது பெற்ற ராஜ்குமார் பெரியசாமி பேசினார்.