ஒரு நாயை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘கூரன்’. இப்படத்தில் இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்னர். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை
சென்னையில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா சஞ்சய் காந்தி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…
இந்த சினிமா விழாவுக்கு என்னை அழைத்தபோது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. பெரிய கருத்தை, நல்ல சிந்தனையை முன்வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயிரினங்களும் ஒன்று என இப்படத்தின் கரு சொல்கிறது. உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது, அது வாழ விரும்புகிறது, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது.
இந்தப் படத்தில் நாய்களைப் பற்றிப் பேசுவதால் நாய்களிலிருந்து தொடங்குவோம். நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன். நாய்கள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், நாய்கள் மட்டுமல்ல. பூனைகள், கோழிகள், பாம்புகள், பன்றிகள், கழுதைகள் இவை அனைத்திற்கும் பொதுவான ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. அவை மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன. ஆனால் நாம்தான் அவற்றைப் புரிந்து கொள்வதில்லை.
ஒரு நாய்க்கு காலில் காயம் என்றால், அது அவதிப்படுகிறது என்றால், அது குறித்து என்னால் உணர்ந்து கொள்ள முடியும். அதன் மொழி எனக்கு தெரியும். விலங்குகளின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பார்க்கும் போது , அதை நம்முடையதாக உணர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது. நீங்கள், நான், அது, உங்கள் காலடியில் செல்லும் எறும்பு ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை இன்னும் சொல்லப்போனால் கோழிகள் திருமணம் செய்து கொள்கின்றன. பிள்ளைகள் குடும்பம் என வாழ்கின்றன. ஆண் கோழிகளுக்கு மனைவியைப் போல பெண் தோழிகளும் உண்டு. மனைவிக்கும் பெண் தோழிக்கும் சண்டை வருவதுண்டு.
இந்தப் படம் நாயின் உரிமை வழக்கு பற்றிப் பேசுகிறது. இந்தப் படம் நீதிபதிகளுக்கு மட்டும் காட்டப்படாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் காட்டப்பட வேண்டும். விலங்குகள் மீது போர் தொடுப்பதை நாம் நிறுத்தும் வரை, நமக்குள் அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. இது ஒரு பிரச்சார படம் அல்ல ,கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம் .இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.