No menu items!

விசா இல்லாமல் இந்தியர்களுக்கு அனுமதி; இந்தியா – ரஷ்யா உறவில் அடுத்த மைல்கல்

விசா இல்லாமல் இந்தியர்களுக்கு அனுமதி; இந்தியா – ரஷ்யா உறவில் அடுத்த மைல்கல்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், தற்போது உலகில் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், அடுத்த ஆண்டு (2025) முதல் ரஷ்யாவும் இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் வணிகம் மற்றும் தொழில் நோக்கத்திற்காக அதிக அளவில் ரஷ்யாவுக்கு பயணம் செய்கின்றனர். இதன் அடிப்படையில், விசா இல்லாமல் ரஷ்யாவுக்குள் இந்தியர்களை அனுமதிக்க, விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா நாட்டின் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இ-விசாக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது விசாக்கள் நான்கு நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், ரஷ்யாவில் நுழைவதற்கும் தங்குவதற்கும் அந்நாட்டின் தூதரகத்தில் இந்தியர்கள் விசா பெறும் நடைமுறை மிகவும் நீண்டதாக இருப்பதால், அந்த முறையை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கு தற்போது விசா இல்லாமல் சீனா மற்றும் ஈரான் நாட்டினர் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாகக் குழுத் தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ், “இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது. 2025 மார்ச் மாதம் அது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். விசா இல்லாமல் ரஷ்யா வர அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். கடந்த ஆண்டு மட்டும் 60,000 பேர் ரஷ்யாவுக்கு பயணித்துள்ளனர்.

இது 2022இல் இருந்து 26 சதவீதம் அதிகமாகும். 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 1,700 இ-விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இ-விசாக்களின் எண்ணிக்கையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்களுக்கு 9,500 இ-விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 28,500 இந்தியப் பயணிகள் மாஸ்கோவிற்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 1.5 மடங்கு அதிகம்” என தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள், மொரிஷியஸ், இலங்கை, தாய்லாந்து, மக்காவ், பூட்டான், கம்போடியா, நேபாளம், கென்யா, மியான்மர், கத்தார், உகாண்டா, ஈரான், சீஷெல்ஸ், ஜிம்பாப்வே உட்பட 62 நாடுகளுக்கு தற்போது விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என்னும் நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவும் இந்த பட்டியலில் சேர உள்ளது இந்தியா – ரஷ்யா நாடுகள் இடையேயான நீண்ட உறவில் அடுத்த மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...