No menu items!

இந்திய அணியில் ஒதுக்கப்பட்டாரா அஸ்வின்?

இந்திய அணியில் ஒதுக்கப்பட்டாரா அஸ்வின்?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டுமுதல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் நகரில் இன்று நிறைவுபெற்றது. அதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கேப்டன் ரோஹித் சர்மாவுடன் உள்ளே நுழைந்த ரவிச்சந்திரன் அஸ்வின், “நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள போவதில்லை. அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இதுதான் எனது கடைசி நாள். ஒரு கிரிக்கெட்டராக எனக்குள் இன்னும் திறமை இருப்பதாகவே உணர்கிறேன். ஆனாலும், க்ளப் அளவிலான கிரிக்கெட்டில் அதைக் காட்ட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள். ரோஹித், விராட், ரஹானே எனப் பல கிரிக்கெட்டர்களுக்கு நன்றி கூற வேண்டியுள்ளது. நன்றி சொல்வதற்கு நிறைய பேர் உள்ளனர். நிறைய நினைவுகளைச் சேகரித்துள்ளேன். இது மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணம்” என்று அஸ்வின் கூறினார்.

அஸ்வினின் ஓய்வு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, “இன்று நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் எனச் சொன்னபோது, அது என்னை உணர்ச்சிவயப்படுத்தியது. நாம் ஒன்றாக விளையாடிய நாட்கள் என் கண்முன் வந்தன. உங்களுடனான இந்தப் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன். இந்திய கிரிக்கெட்டில் உங்களின் திறமையும் வெற்றிகளில் உங்கள் பங்களிப்பிலும் நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நினைவில் கொள்ளப்படுவீர்கள். உங்களுக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும், எல்லாவற்றுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வினின் ஆரம்ப காலம்:

அஸ்வினின் வெற்றிக்கு வித்திட்ட முதல் நபர் அவரது அப்பா ரவிச்சந்திரன். சென்னையில் கிளப் கிரிக்கெட்டில் ஆடிவந்த ரவிச்சந்திரனுக்கு இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்பது கனவு. ஆனால் அந்த கனவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. தன்னால் முடியாததை மகனை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் விரும்பினார். கிரிக்கெட் வீர்ராகும் கனவை தன் மகனுக்குள் விதைத்தார்.

ஆரம்பத்தில் அஸ்வினுக்கு சுழற்பந்து வீச்சில் ஆர்வம் அதிகம் இல்லை. ஒரு பேட்ஸ்மேனாகத்தான் விரும்பியுள்ளார். பள்ளிக்கூட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், மித வேகப் பந்து வீச்சாளராகவும்தான் அஸ்வின் இருந்துள்ளார். இந்த சூழலில் அவரது பயிற்சியாளரான சி.கே.விஜய்தான் அஸ்வினின் உடல்வாகு ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கானது என்று கண்டுபிடித்துள்ளார். அதை அஸ்வினுக்கு சொல்லி, அவரை சுழற்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளார். அந்த வகையில் அஸ்வினை உருவாக்கிய இரண்டாவது நபர் அவரது பயிற்சியாளர்.

சுழற்பந்து வீச்சாளரான பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்த அஸ்வினுக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்த அணி சிஎஸ்கே. ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக பல விக்கெட்களை அஸ்வின் கொய்ய, 2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அணியின் ஒரே தமிழராக இடம்பெற்றார் அஸ்வின். அன்றிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...