காமெடி நடிகர்களுக்கு ஒரு கட்டத்தில் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசை வரும். வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு, சதீஷ் உட்பட பலர் கதை நாயகன் ஆகி விட்டார்கள். இப்போது ரோபோசங்கர் முறை. அம்பி ” என்ற படத்தின் மூலம் அவர் கதைநாயகன் ஆகியிருக்கிறார். பாஸர் ஜே எல்வின் அந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
ரோபோவும், கமல்ஹாசனும் நல்ல நண்பர்கள் என்பதால், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு, ரோபோவை வாழ்த்தியுள்ளார். ஹீரோயினாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா உட்பட பலர் நடிக்க, ஏ பி முரளிதரன் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனரிடம் கேட்டால் ‘‘இது முழுக்க முழுக்க பேமிலி ட்ராமா கலந்த காமெடி திரைப்படம். இதில், கதைப்படி ஹீரோ,
அப்பாவியாக , பயந்தாங்கோலியாக இருக்கிறார். ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால்தான் பெரிய விஷயங்கள் நடக்கிறது.அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று மற்றவர்கள் நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படி மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார். கிளைமாக்சில் அம்பியாக இருந்தாரா இல்லை அந்நியனாக மாறினாரா என்பதை சொல்லியிக்கிறோம். கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன், அவர் சிறப்பாக நடித்துள்ளார். சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றது. ’’ என்கிறார். நிஜ வாழ்க்கையில் விரைவில் ரோபோ சங்கர் தாத்தா ஆகப்போகிறார். இந்த நேரத்தில் அவர் சினிமாவில் ஹீரோ ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.