நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி உட்பட பலர் நடிக்கும் படம் திரு.மாணிக்கம். இப்பட்த்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இயக்குனர் அமீர் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘நேர்மையை பற்றி இந்த படம் பேசுகிறது. நாம் செய்த தவறுகளை குறித்து யோசிக்க வைக்கிறது. நான் மதுரையில் என் நண்பர் கடையில் வேலை செய்தபோது, சிகரெட் பிடிப்பதற்காக சில்லறை காயின்களை திருடி இருக்கிறேன். சேது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியபோது காஸ்ட்யூம் பர்சேஸ் செய்தபோது, தயாரிப்பாளர் பணத்தில் எனக்காக 2 சட்டை வாங்கி போட்டு இருக்கிறேன். அந்த பட தயாரிப்பாளர் கந்தசாமியிடம் அதற்கான பணத்தை திருப்பி தர வேண்டும். என் நண்பர் கடையில் சிகரெட்டுக்காக திருடிய காசை திருப்பி தர வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். காரணம், இந்த படத்தின் கதை அப்படி. இந்த படம் பார்ததால் நமக்குள் மாற்றம் வரும்’ என்றார்
இந்த விழாவில் சமுத்திரக்கனி பேசியதாவது…
நல்ல கதை இயக்குனரையே இயக்கும். அதுவே தனக்கு வேண்டியதை அமைத்துக்கொள்ளும் என்று இயக்குனர் பாலுமகேந்திரா சொல்வார். அந்த மாதிரிதான் திரு.மாணிக்கம் கதை. தனக்கு தேவையான ஆட்களை இந்த கதை அதுவாகவே சேர்த்துக்கொண்டது. இயக்குனர் நந்தா பெரியசாமி என்னிடம் கதை சொன்னபோது, ‘‘முதலில் இயக்குனர் பாரதிராஜாவிடம் போய் பேசுங்க’’ என்றேன். அவரும் போய் கதை சொன்னார். பாரதிராஜா சார் நடிக்க ‘ஓகே’ என்றவுடன் இந்த படம் தொடங்கியது. அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரிதான் உழைக்கிறேன். இந்த படத்துக்கும் அப்படியே.
நேர்மையும், உண்மையும் எப்போதும் வெல்லும் என்பார்கள். நேர்மை பற்றி அதிகம் பேசிக்கொண்டு இருக்கிறோம். என்னை பொறுத்தவரையில் இயல்பாக இருப்பதே நேர்மை. எனக்கும், இயக்குனர் அமீருக்குமான நட்பு அப்படிதான் ஆரம்பித்தது. உன்னை சரணடைந்தேன் படத்தை முதலில் இயக்கினேன். அந்த பட ரிலீஸ் சமயத்தில் இயக்குனர் அமீர் பழக்கம். நான் ராம் என்ற படத்தை இயக்கப்போகிறேன், பூஜைக்கு வாங்க என்று அழைத்தார். அப்படிதான் எங்கள் நட்பு ஆரம்பித்தது.
2 படம் இயக்கிவிட்டு, 2 ஆயிரம் எபிஸோட் டிவி சீரியல் இயக்கிவிட்டு, நான் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தேன். அந்த படத்தில் என் வொர்க் பார்த்துவிட்டு, நாடோடிகள் படம் இயக்கும் வாய்ப்பை சசிகுமார் கொடுத்தார். ஒரு சீரியலில் நான் முதலில் நடித்தபோது, அதில் என்னுடன் நடித்தவர்களுக்கு என்னை ஏனோ பிடிக்கவில்லை. அந்த வெறுப்பில் ஒரு நடிகர் ஒரு காட்சியில் என்னை ரொம்பவே பலமாக எட்டி உதைத்தார். பல டேக் ஆனது. பலமுறை உதைத்தார்.ஆனால், நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இப்போது நிறைய படங்களில் நடிக்கிறேன்.
முன்பெல்லாம் கெட்டவர்களை பார்த்தால், அவனுடன் சேராதே என்பார்கள். இப்போது நல்லவனை பார்த்ததால் அவனுடன் சேராதே என்று சொல்லும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. நாடோடிகள் படத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அனன்யா. 2 மாத தேடலுக்குபின் கிடைத்தவர்தான் அனன்யா. அவர் இந்த படத்தில் எனக்கே ஜோடியாக நடிக்கிறார். அவர் நடிப்பு அபாரம். பாரதிராஜா படங்களில் நடித்த வடிவுக்கரசி, இந்த படத்தில் அவர் ஜோடியாகவே நடித்துள்ளார். அவர் நடிப்பு, வாய்ஸ் பேசப்படும்.
இந்த படத்தில் பாரதிராஜாவுக்கும் முக்கியமான கேரக்டர். படப்பிடிப்பில் என்னை பார்த்து ‘‘நீ பண்பட்ட நடிகன் ஆகிவிட்டாய்’’ என்று பாராட்டினார். அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதது.