கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக புதுப்பட பூஜைகள் தீவிரமாக நடக்கின்றன. இறுதிச்சுற்று படத்துக்குபின் தமிழில் படம் பண்ணாமல், இந்தியில் அந்த படத்தில் ரீமேக்கை இயக்கி வந்த சுதா, மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்த முறை சுதா படத்தில் ஹீரோவாக நடிப்பது சிவகார்த்திகேயன், தம்பியாக அதர்வா, வில்லனாக ஜெயம்ரவி, ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.சில தினங்களுக்கு முன்பு இந்த பட பூஜை நடந்தது. இது சிவகார்த்திகேயனின் 25வது படம், முதன்முறையாக ஜெயம்ரவி வில்லனாக நடிப்பதால் பெயரிடப்படாத இந்த படம் கவனம் பெறுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து இந்த படத்திலும், அதற்கடுத்து டான் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். அமரன் வெற்றியை தொடர்ந்து அவரின் மார்க்கெட், சம்பளமும் உயர்ந்துள்ளது.
டாடா என்ற வெற்றி படத்துக்குபின் ஜெயம்ரவி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் கணேஷ்பாபு. இது ஜெயம்ரவி நடிக்கும் 34வது படம். சமீபத்தில் இந்த பட பூஜை நடந்தது. இதில் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் மகள் தவ்திஜிவால் ஹீரோயினாக நடிக்கிறார். பி.வாசு மகன் சக்தி வில்லனாக நடிப்பதாக தகவல். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒரே நேரத்தில் ஒரு படத்தில் ஹீரோ, இன்னொரு படத்தில் வில்லனாக ஜெயம்ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் தவிர, காதலிக்க நேரிமில்லை, ஜீனி படங்களில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, விலங்கு வெப்சீரியலுக்குபின் சூரியை வைத்து மாமன் என்ற படத்தை இயக்குகிறார் பிரசாந்த்பாண்டியராஜன். இந்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடந்ததது. இதில் கட்டாகுஸ்தி, பொன்னியின்செல்வன் படங்களுக்குபின் ஐஸ்வர்யலட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார்.விலங்கு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் நடந்த கிரைம் திரில்லர் கதை. இது குடும்ப கதையாம். சூரி நடித்த கருடன் படத்தை தயாரித்த நிறுவனமே இதையும் தயாரிக்கிறது.