தனது தபேலாவால் உலகம் முழுவதும் இசைப் பிரியர்களை கட்டிப்போட்டவர் ஜாகீர் உசேன். இந்தியாவின் பெருமைமிகு இசைக் கலைஞர்களில் ஒருவர். உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் நேற்றிரவு காலமானார்.
புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞரான அல்லா ரக்காவின் மூத்த மகன்தான் ஜாகீர் உசேன். ஜாகீருக்கு சிறுவயதிலிருந்தே தபேலாவின் நுணுக்கங்கள் அனைத்தும் அத்துப்படி. 3 வயதில் தனது தந்தையிடமிருந்து பாரம்பரிய மிருதங்கம் தாள இசைக்கருவி வாசிக்க கற்றுக்கொண்டார். 12 வயதில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். புகழ்பெற்ற பாப் இசைக்குழுவான தி பீட்டில்ஸுடன் மற்றும் பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு இசைக் கச்சேரிகளை அரங்கேற்றம் செய்துள்ளார்.
ஜாகீர் உசேன், பிரபல புல்லாங்குழல் இசை கலைஞரான ராகேஷ் சவுராஷியாவுடன் இணைந்து நடத்திய கச்சேரி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ராகேஷின் புல்லாங்குழல் மனதை வருடும் நேரத்தில், ஜாகீரின் தபேலா மனதை தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருப்பதாக பலரும் கூறியிருந்தனர்.
1990இல் சங்கீத நாடக அகாடமி விருது , சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் ஆகியவற்றை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து 1999இல், யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் என்டோமென்ட் ஃபார் தி ஆர்ட்ஸ் ‘ நேஷனல் ஹெரிடேஜ் பெல்லோஷிப் வழங்கப்பட்டது. இது பாரம்பரியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இத்துடன் இல்லாமல் 2018இல் ரத்னா சத்ஸ்யா விருது, ஏழு முறை கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 முறை விருதுகளையும் வென்றிருக்கிறார்.
2024ஆம் ஆண்டில், 66வது கிராமி விருதுகளில் தபேலா இசைத்து ஜாகீர் உசேன் வரலாறு படைத்தார். ஒரே இரவில் மூன்று வெற்றிக் கோப்பைகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இவரது பெருமையை போற்றும் வகையில், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தில் இடம்பெற்ற டெலிபோன் மணிபோல் சிரித்தவள் இவளா எனும் பாடலில், பாடலாசிரியர் வைரமுத்து, கதாநாயகியை ஜாகீர் உசேன் தபேலா இவள் தானா என வர்ணித்து எழுதி இருப்பார்.
‘இடியோபாடிக் பல்மனரி ஃபைப்ரோஸிஸ்’ எனும் நோயால் ஜாகீர் உசேன் நீண்ட காலமாக போராடி வந்தார். இது நுரையீரல் தொடர்பான நோயாகும். புகைபிடித்தல், காற்று மாசு, தொழிற்சாலை மாசு உள்ளிட்ட காரணிகளால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு நுரையீரலில் உள்ள திசுக்கள் வழக்கத்தை விட தடிமனாகிவிடுகிறது. எனவே சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த பிரச்சினைக்காக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உயிரிழந்திருக்கிறார்.
ஜாகீர் உசேனின் மறைவு இசை பிரியர்களுக்கு மட்டுமல்லாது, மொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அந்த வகையில் பிரதமர் மோடி, ” தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவர் தனது இணையற்ற தாளத்தால் உலக அரங்கிற்கு தபேலாவை கொண்டு சென்று மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்துள்ளார். இந்திய பாரம்பரிய மரபுகளை உலகளாவிய இசையுடன் கலக்கியிருக்கிறார். அது கலை பண்பாட்டு ஒற்றுமையின் சின்னமாக விளங்கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், இசையமைப்பாளர்களுக்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ” ஜாகிர் உசேன் பாரம்பரிய இசை உலகில் அழியாத முத்திரையை பதித்தவர். அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த துன்பத்தை அளிக்கிறது. தபேலா வாசிப்பை தனது வாழ்க்கை முறையாகக் கொண்ட ஜாகீர் உசேன், இந்திய இசைக்கு உலகம் முழுவதும் நற்பெயரை பெற்று கொடுத்துள்ளார். உசேனின் மறைவு கலை மற்றும் இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்” என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.