No menu items!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். ஈவிகே சம்பத் – சுலோச்சனாவின் மகனான இவர் பெரியாரின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கதது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி வந்தது.

கடந்த மாதம் 28-ம் தேதி இளங்கோவன் உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. அவரை வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த சூழலில் அவர் இன்று காலை காலமானார். இளங்கோவன் மறைவு தொடர்பாக, மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நாளை தொண்டர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல், நாளை ராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...