மஞ்சும்மல்பாய்ஸ் பட வெற்றியை தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகளவில் மலையாள படங்கள் திரையிடப்படுகின்றன. சில படங்களில் தமிழில் டப்பாகியும் வருகின்றன. பிரேமலு, ஆவேசம், ஆடுஜீவிதம், நுணக்குழி, ஏ.ஆர். எம், பிரம்மயுகம், சுக்ஷமதர்சினி போன்ற பல மலையாள படங்களில் தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டன. இதில் பல படங்கள் வெற்றியை பெற்றன. தமிழகத்தில் வருமான தரக்கூடிய மார்க்கெட் உருவாகி உள்ளது என்று மலையாள திரையுலகமும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
அந்தவகையில், வரும் டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தையொட்டி மோகன்லால் நடித்த மோகன்லாலின் ” பரோஸ்” என்ற படமும் தமிழகத்தில் வெளியாக உள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்த இந்த படத்தை, 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள மோகன்லாலே முதன்முறையாக இயக்கி நடித்துள்ளார். 3டி பிரம்மாண்ட பேண்டஸி படமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது. பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து இதில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் மோகன்லால். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருப்பதால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பரோஸ் வெளியாகிறது.
‘டீப் ப்ளூ சீ 3’, ‘ஐ இன் தி ஸ்கை’ மற்றும் ‘பிட்ச் பெர்பெக்ட்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, தமிழகத்தை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.