சித்தார்த்திற்கு நடந்த விபத்தில் இடையில் சில வருடங்கள் தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் மறந்து விடுகிறது. இந்த நிலையில் அவர் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தை சந்திக்கிறார். அவருடைய சமூக சிந்தனையை பார்த்து காதலிக்கத் தொடங்கிறார். அவரை அம்மாவிடம் காட்ட அவர் அதிர்ந்து போகிறார். ஆஷிகா சித்தார்த்தின் மனைவி என்ற விபரம் தெரியாமல் அவரையே காதலிப்பதாக சொல்கிறார். இதனால் அவரது நண்பர்களை அழைத்து விபரத்தை சொல்கிறார்.
அவருக்கு எப்படி திருமணம் நடந்தது ? எதனால் அவர்கள் பிரிந்தார்கள் ? என்ன நடந்தது ? என்பதை அழகான காதல் கதையாகவும், ஆக்ஷன் திரில்லாராகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்.ராஜசேகர்.
சித்தார்த் எதிர்பார்த்த காதலும், ஆக்ஷனும் கலந்த பாத்திரம் என்பதால் வெகு இயல்பாக செய்திருக்கிறார். நடந்தது எதுவும் புரியாமல் மனைவியிடமே காதல் சொல்லும் போதும், மறந்து விட்ட நினைவுகள் திரும்ப வரும் போதும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் அதிர விடுகிறார்.
நாயகியாக ஆஷிகா ரங்கநாத் அழகாக வந்து ,மனதில் நிறைகிறார். எளிதில் வசீகரிக்கும் கண்கள் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற கொழுக் முகம் என்று படம் முழுவதும் கனத்த மௌனத்துடன் வருகிறார். அது படத்தின் சீரியஸ் தன்மையை அதிகப்படுத்துகிறது. முட்டை கண்கள் கண்ணீர் ததும்ப கவிதை பேசுகிறது. கருணாகரன், மாறன், பால சரவணன் சஸ்டிகா கலகலப்பூட்டுகிறார்கள். பொன் வண்ணன் ஜெயப்பிரகாஷ் நல்ல தேர்வு. அதிரடி படங்களுக்கு நடுவே மென்மையான படம். முதல் பாதி ஒரு குடும்பம், காதல் என்று மென்மையாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் திருப்பங்களும் ஆக்ஷன் காட்சிகளுடனும் விறுவிறுப்பும் சேர்ந்து வேகமாக நகர்கிறது.
இயக்குனர் ராஜசேகரின் வித்தியாசமான திரைக்கதையில் படம் இளமையும் காதலுமாக இருக்கிறது. நமிக்கை தருகிறார் ராஜசேகர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசை சிறப்பு. கே.ஜி.வெங்கடேஷ் ஓளிப்பதிவு அழகாக இருக்கிறது. பழைய பாணி பாடல்களை தவிர்த்திருந்தால் இன்னும் வேகமாக இருந்திருக்கும்.