சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த பஷார் அல் அசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது. சிரியாவில் இப்போது என்ன நடக்கிறது? உள்நாட்டுப் போர் முதல் தற்போது வரை அங்கு என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்…
சிரியா, மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு. சிரியாவை சுற்றி இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. சிரியாவின் அதிபராக, 1971ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் ஹசீப் அல் அசாத் இருந்தார். 2000ஆம் ஆண்டு ஹசீப் அல் அசாத் மரணமடைந்ததையடுத்து அவரது மகனான பஷிர் அல் அசாத், 2000 ஜுலை 17ம் தேதி சிரியாவின் அதிபராக பொறுப்பேற்றார்.
ஹசீப் அல் அசாத்திற்கு பிறகு அவரது மகனான பஷிர் அல் அசாத் அதிபராக பொறுப்பேற்றது மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற வேண்டும். சர்வாதிகார, குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென 2001ஆம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், கிளர்ச்சியாளர்களை பஷிர் அல் அசாத் கடுமையான முறையில் ஒடுக்கினார்.
பஷிர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஷிர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சி உள்நாட்டு போராக வெடித்தது. சிரியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு ஆயுதக்குழுக்கள் பஷிர் தலைமையிலான அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் குதித்தன. கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் துருக்கியும் ஆதரவு அளித்தது. இது ஷியா, சன்னி பிரிவினர் இடையேயான மோதலாக வெடித்தது.
பஷிர் தலைமையிலான அரசு ஷியா இஸ்லாமியர்களின் ஆதரவு பெற்றது. கிளர்ச்சிக்குழுக்களில் பெரும்பாலானோர் சன்னி பிரிவினராக இருந்தனர். பஷிர் தலைமையிலான சிரியா அரசுக்கு ரஷியா, ஈரான் அரசுகள் ஆதரவு அளித்து வந்தது. ஈரானின் ஆதரவு பெற்று லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் பஷிர் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தது. இதனால், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான மறைமுக போர் களமாக சிரியா மாறியது.
சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். சிரியாவில் அமெரிக்க படைத்தளம், ரஷிய படைத்தளம் அமைக்கப்பட்டன. கிளர்ச்சிப்படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளும் சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷிய படைகளும் வான்வழி தாக்குதல்கள் நடத்தின. அதேபோல், கிளர்ச்சிப்படைகளும் சிரிய அரசுப் படைகளும் மோதின. இந்த உள்நாட்டு போரில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் சிரிய அரசு படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதனிடையே, சிரியாவில் செயல்பட்டு வரும் ஹயத் தஹிர் அல் ஷம், சிரியா விடுதலை ராணுவம், சிரியாவில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் உள்பட பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் இணைந்து பஷிர் அல் அசாத் தலைமையிலான சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டன. இதில் சில கிளர்ச்சிக் குழுக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பை உருவாக்கின. அந்த அமைப்பு பின்னர் அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளின் முயற்சியால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. தற்போதும், ஐ.எஸ். அமைப்பு சிரியாவின் ஒருசில பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. கிளர்ச்சிக் குழுக்கள் சிரியாவில் பஷில் அல் அசாத் தலைமையிலான அரசை வீழ்த்த தொடர்ந்து சண்டையிட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலையை பயன்படுத்திய கிளர்ச்சிக்குழுக்கள் சிரியாவை கைப்பற்றியுள்ளது. அதாவது, உக்ரைன் உடனான போரால் சிரியா அதிபர் அசாத் அரசுக்கு வழங்கிவந்த ஆயுத உதவி, ராணுவ உதவியை ரஷியா பெருமளவு குறைத்துக்கொண்டது. இஸ்ரேல் உடனான போரில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு பெரும் பாதிப்பை சந்தித்தது. அதேபோல், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் வான்பாதுகாப்பு அமைப்பு, ராணுவ கட்டமைப்புகள் பலவீனமான சூழ்நிலையில் உள்ளன.
இந்த சூழ்நிலைகளை சாதமாக பயன்படுத்திக்கொண்ட கிளர்ச்சிக்குழுக்கள் தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ளன. தலைநகர் டமாஸ்கசுக்குள் நுழைந்த கிளர்ச்சிக்குழுக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியுள்ள நிலையில் அதிபர் பஷிர் அல் அசாத் சிரியாவை விட்டு தப்பிச்சென்றுள்ளார். இதன் மூலம் சிரியாவில் பஷிர் அல் அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி சிரியாவில் 53 ஆண்டுகால பஷிர் அல் அசாத்தின் குடும்ப ஆட்சியும் (தந்தை , மகன்) முடிவுக்கு வந்துள்ளது.
அதேவேளை, சிரியாவில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக்குழுக்களில் ஹயத் தஹிர் அல் ஷம் என்ற கிளர்ச்சிக்குழு தற்போது முதன்மையானதாக உள்ளது. சிரியாவில் அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ இந்த கிளர்ச்சிக்குழு முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த கிளர்ச்சிக்குழுவின் தலைவராக அபு முகமது அல் ஜவ்லானி செயல்பட்டு வருகிறார்.
கடந்த புதன் கிழமை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு வடமேற்கில் ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக வழிநடத்தியது. கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். பின்னர் சிரிய ராணுவம் வீழ்ச்சி அடைந்ததால், தலைநகர் டமாஸ்கஸுக்கு கிளர்ச்சிப் படை முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்து, நாட்டின் மிகவும் மோசமான ராணுவ சிறை என்று கூறப்படும் சைட்னாயாவில் இருந்த கைதிகளை விடுவித்ததாக அறிவித்தனர். அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள், அவர்கள்: “கொடுங்கோல் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத் தப்பி ஓடிவிட்டார்” என்று அறிவித்தனர்.
மேலும், “அவர் ஆட்சியின் கீழ் 50 வருட அடக்குமுறை, 13 வருட குற்றங்கள், கொடுங்கோன்மை மற்றும் கட்டாய இடப்பெயர்வுக்குப் பிறகு, இருண்ட காலத்தின் முடிவையும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் நாங்கள் இன்று அறிவிக்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.
கிளர்ச்சியாளர்கள் வருவதற்கு சற்று முன்னர் அதிபர் தலைநகரில் இருந்து விமானம் மூலம் எங்கோ ரகசிய இடத்திற்குச் சென்றதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அசாத்தின் பிரதமர் முகமது அல்-ஜலாலி, “சிரிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட “எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார்” என்று ஒரு வீடியோவில் அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிரியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் சிரிய குடிமக்கள், அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடி வருகின்றனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமையாத் சதுக்கம் அப்பகுதி மக்களின் கொண்டாட்டத்திற்கான மையமாக இருக்கிறது.