திருமாவளவன் சுயமரியாதைக்காரர்; அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று விஜய் பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “ மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான்விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, “விசிக தலைவர் திருமாவளவனால் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாமல் போய்விட்டது. அம்பேத்கரின் நூல் வெளியீட்டு விழாவில்கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் அவருக்கு இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் அவர் மனது இன்றைக்கு எங்களோடு தான் இருக்கிறது” என்றார்.
விஜய்யின் இந்த கருத்துக்கு மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள எதிர்வினைகள் வருமாறு…
அமைச்சர் சேகர்பாபு:
200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, தி.மு.க. மீது எப்படியெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுகிறதோ, அப்போதெல்லாம் 80கிமீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன் 100 கி.மீ. வேகத்தில் பயணிப்பான். மீண்டும் முதல்-அமைச்சர் ஸ்டாலினை அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது.
தமிழக முதல்-அமைச்சரின் ஆட்சி நீதி தேவதையின் ஆட்சி. தவறு செய்வோருக்கு தண்டனை பெற்றுத் தரக்கூடிய ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்கள் நிலைப்பாடு. தி.மு.க. அரசின் திட்டங்கள் இந்தியா மற்றும் உலகிற்கே வழிகாட்டும் திட்டங்களாக உள்ளது. புதுமைப்பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம் என்று பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி:
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல இது கொள்கைக்கான கூட்டணி. இந்த கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா என்று பலர் காத்திருக்கின்றனர். அதற்கு நாங்கள் கண்டிப்பாக இடம் தரமாட்டோம். திருமாவளவன் சுயமரியாதைக்காரர்; அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. திருமாவளவன் மிகப்பெரிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து தி.மு.க. தலைவர் முடிவெடுப்பார்.
ரவிக்குமார் (விசிக எம்பி):
வி.சி.க. தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்கு பிறகும் விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிகவோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.