No menu items!

திருமாவளவன் மனசு! – விஜய் பரபரப்பு பேச்சு

திருமாவளவன் மனசு! – விஜய் பரபரப்பு பேச்சு

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் , முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சி இதுவாகும். இந்நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது…

இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், நம் நாட்டின் நிலைமையை நினைத்து பெருமைப்படுவாரா? வருத்தப்படுவாரா? நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் நியமிக்கப்பட வேண்டும்.

அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்.14-ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்றும் நாம் அனைவருக்கும் தெரியும். அதை கண்டுக்கொள்ளாமல் மேல் இருந்து ஒரு அரசு நம்மை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

வேங்கைவயல் ஊரில் என்ன நடந்தது என்று நாம் அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேதகர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.

இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு அமைந்தாலே போதும். அதனால் தினந்தோறும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வது, அறிக்கை விடுவது, நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வது, மழை தண்ணீரில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான்விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.

விசிக தலைவர் திருமாவளவனால் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாமல் போய்விட்டது. அம்பேத்கரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் அவருக்கு இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் அவர் மனது இன்றைக்கு எங்களோடு தான் இருக்கிறது.

இவ்வாறு விஜய் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...