No menu items!

மருத்துவ செலவுக்கு காசில்லை – தேசிய விருதுபெற்ற இயக்குநரின் பரிதாப நிலை

மருத்துவ செலவுக்கு காசில்லை – தேசிய விருதுபெற்ற இயக்குநரின் பரிதாப நிலை

1980களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர், ‘குடிசை ஜெயபாரதி’. கமர்ஷியல் சமரசங்களின்றி யதார்த்த திரைப்படங்களையே எடுத்துத் தனி அடையாளம் பெற்றவர். தேசிய விருது பெற்ற இயக்குநர் இன்று காலமானார்.

ஜெயபாரதியின் முதல் படமான ‘குடிசை’ 1979இல் வெளியாகினது. தொடர்ந்து ‘உச்சி வெயில்’, ‘நண்பா… நண்பா…’, ‘புத்திரன்’ என இவர் அடுத்தடுத்து இயக்கிய படங்களுமே விமர்சகர்களிடமும் விருது விழாக்களிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றன.

ஜெயபாரதி இயக்கிய கடைசிப் படம் 2010ஆம் ஆண்டு வெளியான ‘புத்திரன்’ என்ற படம்தான். இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் ஆகிய மூன்று தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டன.

ஜெயபாரதி கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்றால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று (டிசம்பர் 6) காலை 6 மணிக்கு ஜெயபாரதி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயபாரதியை நினைவுகூர்ந்துள்ள திரைப்பட இயக்குநர் அஜயன் பாலா, “குடிசை ஜெயபாரதி உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார். அதற்கு தேவைப்படும் விலை உயர்ந்த மருந்துகள் வாங்கக்கூட  பணமில்லாமல் அவதிப்படுகிறார்’ என்று சில தினங்கள் முன்பு உதவி இயக்குனர் ஹரி என்னிடம் சொல்ல கொளத்தூரில் இருக்கும் அவரது வீட்டுக்குச்  சென்று பார்த்தேன்.

மனைவியுடன் தனியாக  வசித்துவந்த குடிசை ஜெயபாரதியின் நிலை வருத்தமுறச் செய்தது. “என்னால் தினசரி மருந்துக்கு ஆகும் செலவை சமாளிக்க முடியவில்லை உதவி செய்யுங்கள் சார்” என்ற குரல் இப்பவும்  என்னை அலைக்கழிக்கிறது.

தமிழ் நாட்டில் 1980களில்  எதார்த்த சினிமா அலை பேரெழுச்சியாக துவங்கிய போது பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோருடன் பல  இயக்குனர்கள் இந்த எதார்த்தவாத அலையில் களமிறங்கினர். அதில் ‘குடிசை’  என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர்தான் ஜெயபாரதி.  தமிழ் நாட்டின் முதல் கிரவுட் பண்டிங்  திரைப்படம். வெறும் 90.000ஆம் ரூபாயில்  எடுக்கப்பட்ட படம் .1979இல் வெளியாகி  பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பிடிவாதமாக எதார்த்த சினிமா மட்டுமே எடுப்பேன் என்ற முயறசியில்  தொடந்து பயணித்தவர். ‘அவள் அப்படித்தான்’ எடுத்த இயக்குனர் ருத்ரையாவின்  அடுத்த படமான ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் நாயகனாக நடிக்க தேர்வு தேர்வு செய்யப்பட்டு  பின் அதிலிருந்து  விலகி  மீண்டும் இயக்க ஆரம்பித்தார். குடிசையை தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னையை மையமாக்க் கொண்டு பாக்யராஜ் நடிக்க ‘ஊமை ஜனங்கள்’ படத்தை 1984இல்  வெளியிட்டார். தொடர்ந்து ‘உச்சி வெயில்’ (1991), ‘நண்பா நண்பா’ (2002), சத்யராஜ் நடித்த ‘குருஷேத்திரம்’ (2006) ஆகிய படங்களை இயக்கினார்.

இவரது ‘உச்சி வெயில்’ இந்தியன் பனோரமாவால் தேர்வு செய்யப்பட்டு பல திரைப்பட விழாக்களில் பங்கேற்ற  திரைப்படம். அதுபோல ‘நண்பா நண்பா’  அதில் நடித்த நடிகர் வாகை சந்திரசேகருக்கு  சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்த திரைப்படம். 2010இல் இவர் கடைசியாக இயக்கிய ‘புத்திரன்’ திரைப்படம் வெறும் 6 லட்சத்தில்  13 நாளில் எடுக்கப்பட்ட படம். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த படமாக தமிழ்நாட்டு அரசால் தேர்வு செய்யப்பட்டு  கடந்த ஆண்டு  திமுக அரசால்  கவுரவிக்கப்பட்டது.

எண்ணிக்கையில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் மாற்று சினிமா எடுப்பேன் என பிடிவாதமாக இயங்கியவர்.  ஜெயபாரதி சிறுகதைகள் ‘இரண்டு பேர் வானத்தை பார்க்கிறார்கள்’, தன் திரைப்பட அனுபவங்களை எழுதிய ‘இங்கே எதற்காக’ ஆகிய நூல்கள் கவனம் பெற்றவை.

மாற்று சினிமாவுக்காக  கருத்தரங்கம் நடத்தும் பண்பாட்டு அக்கறை கொண்ட நம் தமிழக அரசு இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு இன்று நலிவுற்று இருக்கும் படைப்பாளிகளின் இறுதிக்கால மருத்துவ செலவுக்காக  ஏதேனும் அக்கறை எடுத்துக்கொள்வது அந்தப் பாதையில் பயனிப்பவரக்ளுக்கு  பேருதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...