புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின் செல்வாக்கு சித்தூரில மாடுமல்லாமல் ஆந்திரா முழுக்கக் கொடிகட்டி பறக்கிறது. அதே சமயம் புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஷெகாவத். ஒருநாள் ஆந்திர முதல்வரை சந்திக்க செல்லும் புஷ்பாவை, முதல்வருடன் ஒரு போட்டோ எடுத்து வரச் சொல்கிறார் ஸ்ரீவள்ளி. ஆனால் தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் புஷ்பா ஒரு கடத்தல்காரன் என்பதால் முதல்வர் மறுப்பு தெரிவிக்கின்றார். இதனால் கோபமடையும் புஷ்பா, தன்னுடைய நெருங்கிய நட்பில் இருக்கும் எம்.பி சித்தப்பாவை முதல்வர் ஆக்குவதாக சபதம் ஏற்கிறார்.
அதன் பிறகு என்னவானது? புஷ்பாவின் சபதம் நிறைவேறியதா? ஷெகாவத்துக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான பகையும், பழி வாங்கலும் எப்படி நடக்கிறது என்பதே படம்.
முதல் பாகத்தில் சாதாரண கூலியாக இருந்து அழுக்கு சட்டையும், பாக்கு எச்சில் வழியும் புஷா இதில் தகதகக்கும் சட்டையும், ஜொலிக்கும் நகையுமாக வருகிறார். நினைத்த மாத்திரத்தில் ஹெலிகாப்டரையே வாங்கும் அளவுக்கு அதகளம் செய்கிறார். சண்டைக்காட்சியில் நடிப்பதற்கென்றே தனியாக பயற்சி எடுத்திருப்பார் போல அல்லு அர்ஜூன் மிரட்டி எடுக்கிறார். பீலிங்ஸ் வந்துவிட்ட மனைவியை சமாளிக்க முடியாமல் தடுமாறும் குழந்தையாகவும், மன்னிப்பு கேட்டு விட்ட அவமானத்தை தாங்க முடியாமல் தவிக்கும் ரோஷக்காரனாகவும் அட்டகாசம் செய்கிறார். அப்பா பெயருக்காக தங்கையை காப்பாற்ற செல்லும் ஆக்ரோஷ சின்னய்யா, காளி வேஷம் போட்டு ஆடும் ஆட்டம் என்று எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ஆனால் அந்த அழுக்கு புஷ்பா கூலியாக இருந்து நம் மனதைக் கவர்ந்தது போல இந்த கோட்டுஸ்வர புஷ்பா கவரவில்லை.
ராஷ்மிகா பீலிங்ஸ் பீலிங்ஸ் என்று கொஞ்சி கொஞ்சி பேசியிருப்பது ரசிக்க வைக்கிறது. கோவில் திருவிழாவில் என் ஆளு என்று புருஷனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பேசும் காட்சியிலும் கைதட்டல் வாங்குகிறார்.
பகத் பாசில் இந்த பகுதியில் நடிக்க நிறைய வாய்ப்பு அதை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி ரமேஷ்ராவ் சித்தப்பா எம்.பி.யாக வந்து சட்டை பேண்டை கழற்றி விட்டு நிற்கும் காட்சி கைதட்டல். மங்களம் சீனு, கொண்டாரெட்டி ஜக்கா ரெட்டி ஆகியோர் முதல் பாகத்தில் பயமுறுத்துவார்கள் இதில் பயந்து சாகிறார்கள். இதனால் படத்தில் விறுவிறுப்பு குறைந்து போகிறது. படம் முழுவதும் புஷ்பாவின் கோரத்தாண்டவம் மட்டுமே இருப்பதால் பல காட்சிகள் இயல்பை மீறி லாஜிக் எதுவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.
இயல்பாக எடுத்து இந்தியா முழுவதும் பேசப்பட்ட முதல் பாகம் போல் இல்லாமல் எல்லாமே அதிகமாக கொடுத்து ஓவர் டோஸ் அதிகமாகி ஒவ்வொரு காட்சியும் தனித்தனியாக தெரிகிறது.
முதல் பாகத்தில் இருந்த கதையும் அதைச்சார்ந்த ஆக்ஷன் காட்சிகளும் இதில் சண்டைகளுக்கு நடுவே படம் என்று மாறிப்போனது கவலைதான். சமந்த ஆடிய ஓ சொல்லவா பாடலைப் போல ஸ்ரீ லீலா ஆடியிருக்கிறார். முழுபாடலையும் சமந்த தன் இடுப்பு அசைவிலேயே முடித்து விட்டார்.
ஒளிப்பதிவு மிரோஸ்லொ கூபா ப்ரோஷெக். சண்டைக்காட்சிகளில் ஹாலிவுட் படத்தை காட்டியிருக்கிறார். இசை பாடலுக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். பின்னணி இசையில் சாம் சி.எஸ். தேவி ஸ்ரீ பிரசாத் சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்.