இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நேற்று வங்கி சட்டத் திருத்த மசோதாவின் போது, சிபில் ஸ்கோர் குறித்து பேசிய மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
சிபில் ஸ்கோர் குறித்து கார்த்திக் சிதம்பரம் பேசும்போது, “எமதர்மனுக்கு சித்ரகுப்தன் எப்படி உலகத்தில் நாம் செய்யும் அனைத்தையில் குறிப்பு எடுக்கிறாரோ, அப்படி சிபில் என்ற அமைப்பு நம் அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்கிறது. நீங்கள் கார் லோன் எடுக்க வேண்டுமானாலும், நிதி அமைச்சர் வீட்டு லோன் எடுக்க வேண்டுமானாலும் அனைத்தும் சிபில் ஸ்கோரை பொறுத்தே அமைகிறது. ஆனால், இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது.
இது டிரான்ஸ் யூனியன் என்னும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தான் நம் ஒவ்வொருவரின் கிரெடிட்டையும் மதிப்பிடுகிறது. ஆனால், அவர்கள் எப்படி கணக்கிடுகிறார்கள், சரியாக நம் கிரெடிட்டுகளை அப்டேட் செய்கிறார்களா, அதில் எதாவது தவறு நடந்தால் எப்படி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. நமக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்புமே இல்லாமல் இருக்கிறது.
வங்கிகளில் ‘கடனையை சரியாக கட்டி இருக்கிறோம்’ என்று கூறினால், உங்கள் சிபில் ஸ்கோர் மோசமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். நமக்கு சிபிலிடம் எப்படி முறையிடுவது என்று தெரியவில்லை.
விவசாயிகள் மானியம் மூலம் தங்களது கடனை அடைத்தால் சிபில் அதை அப்டேட் செய்வதில்லை. ஏ.ஆர்.சி மூலம் செட்டில்மெண்டிற்கு சென்றால் சிபில் அதை அப்டேட் செய்வதில்லை. இந்த விஷயங்களில் பெரிய அளவில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இதை செய்ய அரசு தவறிவிட்டது” என்று கூறினார்.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, ‘காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் நேற்று பாராளுமன்றத்தில் CIBIL அமைப்பு குறித்து பேசியது முழுமையாக ஏற்கத்தக்கதே. CIBIL சாமான்ய மக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பது உண்மையே. ஒருவர் ஏதேனும் ஒரு வங்கியில் கடன் பெற்று பல காரணங்களால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். குறிப்பாக வங்கிகளின் மீதே கூட தவறு இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவரின் வியாபாரம் கோரோனோ போன்ற இயற்கை பிரச்சனைகளால் மந்த நிலைக்கு செல்ல வாய்ப்புள்ள நிலையில், அந்த நபருக்கு மேலும் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே இழந்ததை மீட்டெடுக்க முடியும் என்ற நிலையில், CIBIL என்ற நிறுவனத்தின் தரவுகளை அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டோரை மேலும் பாதிப்படைய செய்கிறது.
ஆனால், வங்கிகள் CIBIL தரத்தின் அடிப்படையில் தான் கடன் வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் கொண்டு வரப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திரு.கார்த்தி சிதம்பரம் கூறுவது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், மாற்றங்களை திடீரென்று கொண்டு வருவதும், ஒட்டுமொத்த வங்கிகளின் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிக்கல்கள் பல இருந்தாலும் CIBIL தரவுகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கும் முடிவுகளை வங்கிகள் மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, வங்கிகள் உடனடியாக இதற்கான திட்டத்தை தீட்ட வேண்டும். இல்லையேல் சாமான்யனுக்கு நீதி கிடைக்காது போய் விடும் என்பதோடு கஷ்டத்தை, நஷ்டத்தை சந்தித்து கொண்டிருப்பவர்கள் அதிலேயே மூழ்கி விடுவார்கள் என்பது உண்மை தான்” என குறிப்பிட்டுள்ளார்.