No menu items!

காரை விட்டு இறங்க மாட்டீங்களா? அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி மீது சேறு வீச்சு – விழுப்புரத்தில் பரபரப்பு

காரை விட்டு இறங்க மாட்டீங்களா? அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி மீது சேறு வீச்சு – விழுப்புரத்தில் பரபரப்பு

பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் இன்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “மக்களின் விரக்தி வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு”என்று அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் கடந்த 30ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையை கடந்த போது வீசிய சூறைக்காற்றாலும் தொடர் கனமழையாலும் விழுப்புரம் மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து, பல இடங்களில் தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. அதேபோல ஆயிரக்கணக்கான வீடுகளும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன. வெள்ளத்தில் சேதமான மரக்காணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும், முதல்வர் ஸ்டாலின் போன்றவர்கள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினர்.

இதனிடையே நேற்று தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருவேல்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் அந்த சாலைகள் சேதமடைந்ததால், விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இந்தப் பகுதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் மக்களுக்கான உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியர் பழனியுடன், வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, விழுப்புரம் தி.மு.க மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி போன்றவர்கள் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவேல்பட்டு பகுதிக்குச் சென்றார்.

அப்போது அமைச்சர் பொன்முடி தன்னுடைய காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. அதில் கோபமடைந்த மக்கள், ‘காரில் இருந்து இறங்க மாட்டீங்களா… நேற்று வராமல் இப்போது எதற்காக வருகிறீர்கள் ?’ என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன், அவர்கள் மீது மழை சேற்றை வாரி இறைத்தனர். அத்துடன் உடனே சாலை மறியலிலும் அமர்ந்தனர்.

அதை எடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சாலை மறியலை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டதும் காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி மூவரும் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் எழுதியுள்ள பதிவில், “தமிழகத்தின் தற்போதைய நிலை இதுதான். சென்னையைத் தாண்டியுள்ள பிற மாவட்டங்களைக் கண்டுகொள்ளாமல், முதல்வரும் துணை முதல்வரும் மிக குறைவான மழை பெய்துள்ள சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை திமுக-வின் ஊடகப் பிரிவு போல நடந்துகொள்வதுடன், மழை வெள்ளத்தின் கடுமையான பாதிப்புகளையும் உண்மை நிலவரங்களையும் மறைத்து, மக்களை திசைதிருப்பி கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. இது அரசு அலட்சியத்தின் தெளிவான அறிகுறியாகும்.

இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம், பொதுமக்களின் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது. திமுகவுக்கு விரைவில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு மென்மையான நினைவூட்டல்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...