இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர் யார் என்பதை கண்டறிய Hansa Research என்ற ஆய்வு நிறுவனம் நாடு தழுவிய அளவில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 நகரங்களில் 4 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்களில் உங்களுக்குப் பிடித்த 10 பேரின் பட்டியலை தரவேண்டும் என்று தாங்கள் சந்தித்த நபர்களிடம் இந்த நிறுவனம் கேட்டு வாங்கியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி சினிமா பிரபலங்களை விட கிரிக்கெட் வீரர்களே மக்களிடம் புகழ்பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகிய 3 பேரும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். இதில் விராட் கோலியாவது இப்போதும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடுகிறார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகும் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் 3 கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்து 4-வது இடத்தை ஷாரூக் கான் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து அக்ஷய் குமார், அமிதாப் பச்சன் ஆகியோர் 5 மற்றும் 6-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
‘புஷ்பா-1’ படம் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் புகழ்பெற்ற அல்லு அர்ஜுன் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய பகுதியைச் சேர்ந்த ஒரே நபர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சல்மான் கான், ஹ்ருதிக் ரோஷன், தீபிகா படுகோன் ஆகியோர் அடுத்த 3 இடங்களில் இருக்கிறார்கள். இதில் 10-வது இடத்தைப் பிடித்துள்ள தீபிகா படுகோன், இந்த பட்டியலில் இருக்கும் ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.