பல யுகங்களாக தீய சக்திக்கும், தர்மத்திற்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. லெமூரிய கண்டம் கடலில் மூழ்கிய பிறகு, சிவன் நவீன யுகத்தில் நாயகன் வினோத் மோகன் மூலமாக சிவன் அவதரிக்கிறார். அவருக்கு இன்னும் 13 நாட்களில் உலகம் அழிந்து விடும் என்கிற உண்மை தெரிய வருகிறது. அதற்குள் மனித வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து வாழ முடிவு செய்கிறார். வங்கியில் கடன் வாங்கி அதில் வீடு கட்டுகிறார். தனக்கு தெரிந்த உண்மையை வெளியே யாருக்கும் சொல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறார். இன்னும் 13 வது நாளும் வருகிறது. உலகம் எப்படி அழிகிறதா இல்லையா என்பதை படம் விளக்குகிறது.
தர்மத்திற்கும் தீய சக்திக்கும் நடக்கும் யுத்தத்தில் எப்படி தர்மம் ஜெயிக்கிறது என்பதை கிராபிக்ஸ் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் கண்ணா. படத்தில் யுகங்கள் மாறுவதையும் மாயன் என்ற இனம் மெக்ஸிக்கோ வரை பரவி மயன் என்று மாறி இருப்பதையும் விளக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக இருக்கிறது. அதோடு பூமி கடலில் மூழ்கும் அந்த காட்சியும், சிவனுக்கும் தீய சக்திக்கும் நடக்கும் சண்டையும் பிரமாண்டமாக காட்டப்பட்டிருக்கிறது. ஒரு வரி கதையை யோசித்த இயக்குனருக்கு அதை அடுத்தடுத்த காட்சிகளை திரைக்கதையாக்கும் வித்தை தெரியாமல் போய் விட்டது. இதனால் படத்தின் தொடக்க காட்சியும் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளை தவிர இடைப்பட்ட காட்சிகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்புகிறது.
பிந்து மாதவி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், ரஞ்சனா நாச்சியார், கஞ்சா கருப்பு என்று பலர் நடித்திருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் அப்படியே பாதியில் நிற்கிறது.
க்ளைமேக்ஸ் காட்சி மட்டும் மிரட்டலாக இருக்கிறது. குழந்தைகளை கவரும்படி எடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல கதாசியர்களை வைத்துக்கொண்டு படத்தை யோசித்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். படத்தில் இசை பிரமாண்டமாக ஓலிக்கிறது. எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசையைத்திருக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு வரும் இசைகோர்வை சிறப்பாக இருக்கிறது. அருண் பிரசாந்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.