சென்னையில் இருந்து தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவில் இன்று நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை நிச்சயம்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று (நவ.26) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.27) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அதன்பிறகு, மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று (நவ.27) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.28-ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.29-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.30-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.1-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச.2-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.3-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு இன்று (27) ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பரவலாகமழை பெய்து வருகிறது. நேற்று (நவ.26) இரவு முதல் இன்று காலை முதல் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, ஸ்ரீமுஷ்ணம், வடலூர், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், லால்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் மழையின் காரணமாக இன்று (நவ.27) பள்ளி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மழையளவு வடக்குத்தில் 108 மிமீயும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 97.6 மிமீயும், கடலூரில் 97 மிமீயும், அண்ணாமலைநகரில் 76.2 மிமீயும், வானமாதேவியில் 68 மிமீயும், பரங்கிப்பேட்டையில் 68 மிமீயும், சிதம்பரத்தில் 63.2 மிமீயும், காட்டுமன்னார்கோவிலில் 61.4 மிமீயும், லால்பேட்டையில் 52.8 மிமீட்டரும் பதிவாகியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணத்தில் 51.3 மிமீயும், பண்ருட்டியில் 50 மிமீயும், சேத்தியாத்தோப்பில் 49.6 மிமீயும், புவனகிரியில் 49 மிமீயும், குறிஞ்சிப்பாடியில் 39 மிமீயும், விருத்தாசலத்தில் 36 மிமீயும், வேப்பூரில் 33 மிமீயும், தொழுதூரில் 25 மிமீயும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04142 – 220 700, வாட்ஸ்ஆப் எண் 94899 30520 ஆகியவற்றில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கடலூர் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள் என பொதுமக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு (நவ.26) மாவட்டம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 30 நபர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் 25 நபர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூருக்கு வருகை தந்துள்ளனர்.