சென்னையில் இன்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. காலையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், லேசான தூறல் இருந்தது. ஆனால், வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல காலை 10 மணிக்கு மேல் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதுடன், தற்போது புயலாக உருவெடுக்க உள்ளதாகவும். இந்த புயல் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்புகளின் படி, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இது இன்று மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு ஃபெங்கால் (FENGAL) எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே புயல் உருவாகும் முன்பே தற்போது சென்னை முதல் காவிரி டெல்டா வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்த நிலையில், வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இன்று காலை விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால், காலை 10 மணிக்கு மேல் கனமழை பெய்தது. சுமார் 12 மணி வரை விட்டு விட்டு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் இன்று சில மணி நேரம் பெய்த மழைக்கே பழைய மகாபலிபுரம் சாலையான ஓஎம்ஆர் சாலை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வெள்ள நீர் உடனடியாக வெளியேற வழியில்லாத காரணத்தால் அப்படியே தங்கி நிற்கிறது. எனினும் மழை நின்றால் இந்த நீர் விரைவாக வடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் பல்லாவரம், துரைப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே கனமழை காரணமாக ஓஎம்ஆர் சாலையில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு இங்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள அடுத்த புயலாக இது வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதுச்சேரிக்கு தென்கிழக்கே சென்னையில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகரும் இது, இலங்கையின் கரையை கடந்து தமிழகத்தை நோக்கிச் செல்லும் முன், சூறாவளி புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் 12 முதல் 20 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராமநாதபுரம் முதல் திருவள்ளூர் வரையிலான கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்திற்கு கிழக்கே 24 மணிநேரம் நின்று போகும் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தின் வானிலையில் அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நெருங்கி வரும் புயல் காரணமாக ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க மக்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.