சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா 2 படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நாயகன் அல்லு அர்ஜுன் முழுக்க தமிழில் பேசியது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அவர் தமிழில் பேசியபோது தெலுங்கு சேனல் நிருபர்கள் தெலுங்கில் பேசச் சொல்லி கத்தினார்கள் . அப்போது அல்லு அர்ஜுன், தமிழ் நாட்டுக்கு வந்தபோது தமிழில் பேசுவதுதான் இந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை. மும்பை போனால் இந்தியில்தான் பேசுவேன். என்று கூறிவிட்டு பேசத்தொடங்கினார். அவர் பேசியது வைரலாக பரவி வருகிறது. அவர் பேசும்போது,
“நான் பிறந்த என் மண்ணுக்கு எனது அன்பு வணக்கம். சென்னை மக்களே, இந்த நாள் மறக்கமுடியாத நாள். எத்தனையோ வருஷம் இதுக்காக காத்திருந்தேன். ஏனென்றால், கிட்டதட்ட 20 வருஷம் சினிமவில் இருக்கேன், புஷ்பா படத்தை புரொமோஷன் பண்ண வெளிநாடு, வெளிமாநிலம் போனேன். ஆனால் சென்னைக்கு வரும்போது அந்த உணர்வே வேற. சென்னையில் தான் நான் வளர்ந்தேன். அங்கிருந்துதான் எல்லாத்தையும் ஆரம்பித்தேன். அதனால் சென்னையோடு எமோஷ்னல் கனெக்ட் எப்போதுமே இருக்கும்.
என்னுடைய வாழ்க்கையில் முதல் 20 வருஷம் சென்னையில்தான் இருந்தேன். அதனால் நான் வாழ்க்கையில் என்ன சாதித்தாலும் என்னுடைய அடித்தளமாகிய சென்னைக்கு நன்றி சொல்வேன். நான் ஒரு டி.நகர் சென்னை பையன். மேடையில் பேசும்போது அப்பப்போ தமிழ் மறந்துவிடுவேன். ஆனால் நண்பர்களுடன் பேசும்போது ஏய், என்னா மச்சான் இவன்… ரொம்ப ஓவரா பன்றான்னு சரளமா பேசுவேன். நான் நேஷ்னல் போலாம், இன்டர்நேஷ்னல் போலாம், எங்க வேணாலும் போலாம். எங்க போனாலும் ஒரு சென்னை பையன் போனான்னு நீங்க சொல்லிக்கலாம். புஷ்பா படத்துக்காக மூன்று வருஷம் உழைச்சிருக்கேன். டிசம்பர் 5 நெருப்பு மாதிரி ஒரு படம் பாக்கப் போறீங்க. நிறைய தடவை சென்னைக்கு வந்திருக்கேன். நிகழ்ச்சியில் பேசியிருக்கேன். ஆனால் என்னுடைய படத்துக்காக பேச வேண்டும் என எண்ணம் இருந்து கொண்டே வந்தது. என் ஊர்ல எனக்கு ஒரு ஃபங்ஷன் வேணும். அது என்னுடைய லைஃப்ல ஒரு அடையாளம்.
நாடு முழுவதும் நாங்கள் படத்தை புரோமோட் செய்யும் பணியை செய்து வருகிறோம். நாங்கள் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் அதே வேளையில் படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக அங்கு கடும் உழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குநர் சுகுமாரின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். எனது முதல் படம் நடித்த பிறகு ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் சார் அப்போது ‘ஆர்யா’ படத்துடன் வந்தார். ‘ஆர்யா’ படம் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. எனது வாழ்க்கையிலும் முன்னேற்றித்திலும் சுகுமார் சாருக்கு பெரிய பங்குண்டு.