ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். அப்படிப்பட்ட பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியவர் கெளரி ஷங்கர். இவர் உயிர் பிழைத்தது எப்படி? விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பாம்புக்கடி மரணங்கள் ஏற்படக் காரணமாக இருப்பவை நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே. நாகம், கட்டு வரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய இந்த நான்கு வகைப் பாம்புகளால்தான் அதிக உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்கின்றன. எனவே, இந்தியாவில் இந்த நான்கு பாம்புகளின் நஞ்சுக்கு மட்டுமே மருந்து உள்ளது. அதுவும், அனைத்துக்குமே கூட்டுமுறையில் பயன்படுத்தக் கூடிய நஞ்சுமுறி மருந்தே உள்ளது.
மேலே குறிப்பிட்ட நான்கு பாம்புகள் தவிர, இந்தியாவில் ராஜநாகம் கடித்தும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். என்றாலும், ராஜநாகக் கடிக்கென தனியாக நஞ்சுமுறி மருந்து இந்தியாவில் இல்லை. அதற்கான மருந்து தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்படுகிறது. ராஜநாகத்தின் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதும் இந்தியாவில் அதற்கான நஞ்சுமுறி மருந்துகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்படாதமைக்குக் காரணம்.
பெயரளவில் ராஜநாகம் என்று அழைக்கப்பட்டாலும், அவை அறிவியல் ரீதியாக நாகப் பாம்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றாலும் வெவ்வேறு பேரினத்தைச் சேர்ந்தவை. இரண்டுக்குமான வாழ்விடம், வாழ்வுமுறை, நடத்தை ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளது.
நாகப் பாம்புகள் நாஜா (Naja) என்ற பேரினத்தின்கீழ் வருகின்றன. ஆனால், ராஜநாகம் ஓபியோஃபேகஸ் (Opiophagus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உடல் அளவிலேயே இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. நாகப்பாம்பு 6 முதல் 8 அடி வரை வளரும். ஆனால், இந்தியாவில் காணப்படும் ராஜநாகம் அதிகபட்சம் 14 அடி வரை வளரக்கூடியவை.
நாகப் பாம்பின் உடல் முழுக்க ஒரே நிறத்தில் இருக்கும். ஆனால், ராஜநாகத்தின் உடலில் சீரான இடைவெளியில் வெளிரிய நிறப் பட்டைகள் இருக்கும். அந்தப் பட்டைகளின் தன்மை ராஜநாக வகைகளுக்கு இடையே வேறுபட்டாலும் அவை இருக்கும்.
நாகம் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் தென்படும். ஆனால், ராஜநாகம் பெரும்பாலும் அடர்ந்த, உயரமான காடுகளில் வாழக் கூடியவை. அதோடு, சமீப காலமாக மலையடிவாரப் பகுதிகளிலும் தென்படுகின்றன.
நாகப் பாம்புகளைப் பொருத்தவரை, சில தருணங்களில் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தென்பட்டுள்ளன. ஆனால், ராஜநாகம் வாழ்விட எல்லைகளை வகுத்து வாழக்கூடியது.
இவைபோக, இரண்டின் இனப்பெருக்கம், உணவுமுறை ஆகியவற்றிலும் வேறுபாடுகள் உள்ளது. ராஜநாகம் தனது உடலால் சருகுகளைக் குவித்து, கூடு அமைத்து, அதில் முட்டையிடக்கூடிய பழக்கம் கொண்டவை. குட்டிகள் பிறக்கும்வரை, கூட்டில் இருந்து முட்டைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. நாகப் பாம்புகளும் முட்டைகளைப் பாதுகாப்பதை அவதானித்து இருந்தாலும், கூடு அமைக்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை.
இவை போக, உணவுமுறையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இரண்டுக்கும் உள்ளது. எலி, பெருச்சாளி போன்றவற்றையும் பறவைகள், நீர்நில வாழ்விகளான தவளை, தேரை ஆகியவற்றையும் நாகப் பாம்புகள் உணவாக கொள்கின்றன. ஆனால், ராஜநாகம் மற்ற பாம்புகளையே தனது உணவுப் பட்டியலில் முதன்மையாக வைத்துள்ளது. சிறிய அளவு மலைப்பாம்பு, நாகம், பச்சைப் பாம்பு, சாரை, நீர்க்கோலி, விரியன் போன்ற பல வகைப் பாம்புகளை அவை அதிகம் உண்ணுகின்றன.
ராஜநாகங்கள், ஒன்றுக்கொன்று இனப்பெருக்கம் செய்துகொள்வதில்லை. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ஒரு நிலவியல் அமைப்பில் ஒரேயொரு வகை ராஜநாகம் மட்டுமே வாழும். உதாரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் இருவேறு வகைகளைச் சேர்ந்த ராஜநாகங்கள் வாழாது. ஒரே வகை ராஜநாகம்தான் இருக்கும்.
ராஜநாகம், பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும். அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது.
அத்தகைய ஒரு சூழ்நிலையின் போது, ஊர்வன ஆராய்ச்சியாளர் முனைவர் கௌரி ஷங்கரை 2005இல் ராஜநாகம் கடித்தது. கௌரி ஷங்கர் கடிபட்ட போது அவரது உடல் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நஞ்சுமுறி மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், இந்தியாவில் கிடைக்கும் கூட்டுமுறை நஞ்சுமுறி மருந்தும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ஆனாலும் கெளரி ஷங்கர் பிழைத்துக்கொண்டார்.
“என்னைக் கடித்த பாம்பு முழு வீரியத்துடன் கடிக்கவில்லை. அதனால், நஞ்சின் அளவு குறைவாகவே என் உடலில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ராஜநாகத்தின் நஞ்சால் ஏற்படக்கூடிய நரம்பியல் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகத் தீவிரமாகவே இருந்தன. நஞ்சுமுறி மருந்துகள் சரிவர வேலை செய்யாத நிலையில், பாம்புக் கடியால் ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் எனக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அதன்பின்னர் ராஜநாகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
இத்தனை ஆண்டுகளாக ஓபியோஃபேகஸ் ஹன்னா என்ற அறிவியல் பெயரைக் கொண்ட ஒரேயொரு வகை ராஜநாகமே இந்தியா முழுக்க வாழ்வதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது எனது பத்தாண்டு கால ஆய்வின் மூலம், அந்தக் குறிப்பிட்ட ஓபியோஃபேகஸ் ஹன்னா ராஜநாக இனம், கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வதையும், அந்த ராஜநாகமும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வாழும் ராஜநாகமும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை கண்டுபிடித்துள்ளோம்.
உத்தர கன்னடா போன்ற பகுதிகளைச் சுற்றி வாழக்கூடிய பூர்வகுடிச் சமூகங்கள் ராஜநாகங்களை அச்சமூட்டக் கூடிய உயிரினமாகப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவை மிகவும் அவசியமான, விரும்பத்தக்க உயிரினம். காரணம், ராஜநாகம் தங்கள் பகுதிகளில் இருப்பதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். நாகம், சாரை, வரையன், நீர்க்கோலி என இதர வகைப் பாம்புகளை அவை சாப்பிடுவதும் இதற்கொரு முக்கியக் காரணம். அதன்மூலம், மற்ற நச்சுப் பாம்புகளால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ராஜநாகத்தின் இருப்பை அவர்கள் அவசியமானதாகக் கருதுகின்றனர்.
இந்தியாவில் ராஜநாகத்தின் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், அவை சமீப காலமாக கிராமப் பகுதிகளிலும் அதிகம் தென்படுவதைக் கருத்தில் கொண்டு, நஞ்சுமுறி மருந்து தயாரித்துக் கொள்வது அவசியம்” என்கிறார் கௌரி ஷங்கர்