தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறி சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எங்கெங்கு அதிக மழை இருக்கும். விரிவாக பார்க்கலாம்.
ஒரு மணி நேரத்தில் 43 செ.மீ மழை
இன்று (22-11-24) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 43 செமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. மழையைப் பார்த்த 80 வயது முதியவர் ஒருவர், “என் வாழ்நாளில் இதுபோல் மழையை கண்டதில்லை. பெரிய சைஸ் குடத்தை வானத்திலிருந்து திறந்துவிட்டதுபோல இருந்தது” என்று சொல்லியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பெய்த மழை சராசரியை விட மிக அதிகம் என்று வானிலை ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். மேகவெடிப்பு காரணமாக இத்தகைய பெருமழை பெய்வதாக வானிலை மையம் கூறியுள்ள நிலையில், இந்த கனமழையால் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் எல்லாம் தண்ணீர் புகுந்த காரணத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
முன்னதாக ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 41 செ.மீ. மழை கொட்டியது. இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் ராமேசுவரத்தில் நேற்று காலை மழை பெரிய அளவில் இல்லை. ஆனால், மீண்டும் காலை 10 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. மதியத்தின் போது எல்லாம் பலத்த மழையாக மாறியது. அதன்பின்னர் மீண்டும் சாரல் மழை பெய்தது.
தொடர் கனமழையால் ராமேசுவரத்தில் பஸ் நிலையம் பகுதி, ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சாலை, நகராட்சி சுங்கச்சாவடி அமைந்துள்ள சாலை உள்பட நகரின் பல்வேறு தாழ்வான இடங்களிலும் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. அதேபோல் தாழ்வான பகுதிகளை எல்லாம் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று மிக கனமழை பெய்தது. கனமழை காரணமாக தோப்புக்காடு, சின்னப்பாலம், தெற்குவாடி, நடுத்தெரு உள்ளிட்ட ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் பாம்பனில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்கள். இதனிடையே வீடுகளை சூழ்ந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
சென்னையை நோக்கி வரும் புதிய புயல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதற்கு அடுத்த நாள் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும். அதன் பின்னர் 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட இலங்கை-டெல்டா மாவட்டங்களுக்கு இடையே நகரக்கூடும். அது அங்கு 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை அதே பகுதியில் நிலவக்கூடும். அது தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக சென்னை முதல் ராமேசுவரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் Advertisement இதனைத்தொடர்ந்து 25-ந்தேதி மாலையில் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி, 26, 27 (புதன்கிழமை) மற்றும் 28 (வியாழக்கிழமை)-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் பருவமழை பரவலாக தீவிரம் அடைந்து மிக கனமழை வரை பெய்யக்கூடும். சில நேரங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது” என்று சென்னை வானிலைஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறி சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவானால் அதற்கு “பெங்கல்” என பெயரிடப்பட உள்ளது.
நவம்பர் இறுதி வரை கன மழை
வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 26 ஆம் தேதி முதல் தீவிர மழை பொழிவு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரனும் தெரிவித்துள்ளார்.
இது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 26 ஆம் தேதி காலையில் முதலே மழையை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னதாகவே நவம்பர் 23, 24 தேதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை ஒரு சில இடங்களில் பெய்யும். 26 ஆம் தேதி காலை முதல் மழை படிப்படியாக உயர்ந்து இந்த மாதம் இறுதி வரை கன மழை பெய்யும். நவம்பர் 23ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கும். 26 ஆம் தேதி முதல் தீவிரமடைந்து மழை பொழிவை கொடுக்கும். கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக இருக்கிறது, கடல் வெப்பநிலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக கடலோரத்தை ஒட்டி வரும்போது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு பகுதி உருவாகும், அதன் பிறகு எவ்வளவு தீவிரம் என்பதை நாம் உறுதி செய்யலாம். 23ஆம் தேதி கடலோர தமிழகத்தில் மழை தொடங்கி, 26 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும். 26,27,28 ஆகிய மூன்று நாட்களில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடையும்… மற்ற மாவட்டங்களில் மழை குறைந்து காணப்படும். தாழ்வு பகுதி (சலனம்) கரையை கடந்த பின்பு நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் மழை எதிர்பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.