ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், இந்திய அணி முன்னணி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த 2 அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்கியது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்றார். இன்றைய போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டாஸில் வென்ற ஜஸ்பிரித் பும்ரா, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து ஆடவந்த தேவ்தத் படிக்கல்லும் 23 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் வந்த கோலியும் 5 ரன்களில் அவுட் ஆக,. இந்திய அணியின் ஆரம்பம் தடுமாற்றமாக இருந்தது.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் 74 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 26 ரன்களில் இருந்தபோது நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துருவ் ஜூரல் . 11 ரன்களில் வீழ்ந்தார்.
இப்படி அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில் ரிஷப் பந்த் (37 ரன்கள்) நிதிஷ் குமார் ரெட்டி (41 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஒருவாறு கரை சேர்ந்தது. இந்திய அணி தங்கள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்களைச் சேர்த்தது.