No menu items!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐயிடம்! – அரசுக்கு பின்னடைவா?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐயிடம்! – அரசுக்கு பின்னடைவா?

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி நேற்று (20-11-24) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது அரசுக்கு பின்னடைவா? எதிர்கட்சிகள் என்ன சொல்கின்றன? விரிவாக பார்ப்போம்.

கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சுகுணாபுரம் என்ற பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தியதில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தவே, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கள்ளச்சாராய மரண வழக்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு, கள்ளக்குறிச்சி எஸ்.பி-யின் பணியிடை நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டது குறித்தும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்தும் அரசுக்கு கேள்வி எழுப்பினர். “கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் ஏன் உரிய நடவடிக்கைகள்  எடுக்கப்படவில்லை?” எனவும் அரசுத் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை மாநில அரசு கைவிட்டது தவறு” எனக் கூறிய நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

“தங்களிடம் உள்ள ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும்” எனக் கூறிய நீதிபதிகள், “சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை கோரியது ஏன்?

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க சட்டத்துறையின் செயலாளரும் வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை, “கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு வெளிமாநிலங்களில் இருந்து மெத்தனால் வந்ததாக முதலமைச்சரே சட்டமன்றத்தில் தெரிவித்தார். வேறு மாநிலங்களுக்கு உள்ள தொடர்பை விசாரிக்கும் அதிகாரம் சி.பி.ஐ-க்கு உள்ளது. இந்த வழக்கில் போலீஸ் மீது தான் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதை அவர்களே விசாரித்தால் நன்றாக இருக்காது என்பதால் சி.பி.ஐ விசாரணை கோரினோம். இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி போலீஸ் எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அதே எஸ்.பி-க்கு மீண்டும் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.பாலு பேசும்போது, “காவல்துறையின் மெத்தனம், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு துணையாக இருந்தது. மரணம் ஏற்பட்ட உடன் இது வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட நிகழ்வு என மாவட்ட நிர்வாகம் கூறியது. இதன் பின்னணியில் மறைந்துள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள், கள்ளச்சாராய வியாபாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மாநில அரசு ஒரு வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என நீதிமன்றம் நினைத்தால் அந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கலாம். அந்த வகையில் கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது” என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், “ஒரு வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அரசு பதில் என்ன?

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ” கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த வழக்கில் மேற்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். கள்ளக்குறிச்சியில் சம்பவம் நடைபெற்ற உடன் மூன்று அமைச்சர்களை சம்பவ இடத்துக்கு முதலமைச்சர் அனுப்பினார். அவர்களின் உயிரைக் காப்பாற்ற உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி திரட்டியது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...