இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. சமீபத்தில் ஹூருன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் அதானி. எந்த அளவு பணக்காரராக இருக்கிறாரோ அதே அளவுக்கு அவரைச் சுற்றி சர்ச்சைகளும் இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் அதானி, தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி இந்த உயரத்தை எட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றன எதிர்கட்சிகள். இந்தியாவில் எழுந்துள்ள சர்ச்சைகள் போதாதென்று இப்போது அமெரிக்காவிலும் அவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது.
சூரிய மின்சார விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற அமெரிக்க அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்களுக்கு மேல் லஞ்சமாக கொடுக்க ஒப்புக்கொண்டதாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டிரம்பின் தேர்தல் வெற்றிக்குத் தனது சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் கௌதம் அதானி உறுதியளித்திருந்தார். இந்த சூழலில்தான் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து இந்தியாவில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
அதானி பங்குகள் வீழ்ச்சி
அதானி குழுமத்தின் 11 பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.12.3 லட்ச கோடி வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக, அதானி க்ரீன் எனர்ஜி சுமார் 19.5%, அதானி பவர் சுமார் 17.5%, அதானி எண்டர்பிரைசஸ் சுமார் 23% வரை பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. ஃபோர்ப்ஸ் தகவலின் படி, தற்போது அதானியின் சொத்து மதிப்பு 11.4 பில்லியன் டாலர் குறைந்து, 58.4 பில்லியன் ஆக மாறியுள்ளது.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு அதானி கிரீன் நிறுவனம் சார்பில் இன்று கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “அமெரிக்க நீதித்துறையும், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களான கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட முதலீடுகளை பயன்படுத்த வேண்டாம் என்று எங்கள் துணை நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதனை தாங்களும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கும் பங்கு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்த சூழலில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்து, “கவுதம் அதானி இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் சட்டத்துக்கு புறம்பாக நடந்துள்ளார் என்பது இப்போது நிரூபணமாகி உள்ளது. அவரைப் பற்றி நாங்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையாகி உள்ளன. இவ்வளவு நடந்தும் அவர் இந்தியாவில் சுதந்திர மனிதராக சுற்றி வருவது ஆச்சரியம் அளிக்கிறது. பிரதமர்தான் அவரை கைதாகாமல் காப்பாற்றி வருகிறார். அதானியுடன் சேர்த்து பிரதமருக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்கிறது” என்றார்