No menu items!

ஐபிஎல் ஏலம் – யாருக்கெல்லாம் அதிக விலை?

ஐபிஎல் ஏலம் – யாருக்கெல்லாம் அதிக விலை?

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் 24-ம் தேதி ஜெத்தாவில் நடக்கிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய வாய்ப்புள்ள வீரர்கள்…

ரிஷப் பந்த் (இந்தியா):

இந்த ஐபிஎல்லில் அதிக விலைக்கு போவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் வீரர் ரிஷப் பந்த். அவரேகூட சில நாட்களுக்கு முன், “நான் ஐபிஎல் ஏலத்துக்கு வந்தால் எனக்கு என்ன விலை கிடைக்கும்?” என்று தனது எக்ஸ் வலைதளத்தில் கேட்டிருந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பாலோ என்னவோ, அவர் டெல்லி அணியில் இருந்து விலகி ஐபிஎல் ஏலத்துக்கு வந்த்கிருக்கிறார்.

ரிஷப் பந்த் ஏலத்துக்கு வந்ததில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அவர் மீது கண் வைத்திருக்கின்றன. அவரை வாங்குவதற்காக இப்போதில் இருந்தே பணத்தை எண்ணி வருகின்றன. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 446 ரன்களை (ஸ்டிரைக் ரேட் – 155.40) குவித்தது அவரது ரேட்டை இன்னும் உயர்த்தி இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் குறைந்தபட்சம் 25 கோடி ரூபாய்க்காவது ரிஷப் பந்த் ஏலம் போவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து):

டி20 கிரிக்கெட் போட்டிகளில் தான் இருக்கும் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் கெட்டிக்காரர் இங்கிலாந்து வீரரான ஜாஸ் பட்லர். ஆரம்பம் முதல் கடைசி ஓவர் வரை நின்று ஆடக்கூடிய திறன் வாய்ந்த பட்லர், கடந்த ஐபிஎல்லில் கொஞ்சம் சுமாராக ஆடினார். அதனாலோ என்னவோ இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை கழற்றி விட்டுள்ளது. ராஜஸ்தான் அணி வேண்டாம் என்று ஒதுக்கிய ஜாஸ் பட்லரை வாங்க, நிச்சயம் அதிக போட்டி இருக்கும்.

ஸ்ரேயஸ் ஐயர் (இந்தியா):

கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர். ஆனால் கோப்பையை வாங்கிக் கொடுத்தாலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஸ்ரேயஸ் ஐயரை தக்க வைக்காததால் அவர் ஏலத்துக்கு வந்திருக்கிறார். சரியான கேப்டன் இல்லாமல் தத்தளிக்கும் பல அணிகளும் ஸ்ரேயஸ் ஐயருக்கு குறிவைக்கும் என்பதால் நிச்சயம் இந்த ஆண்டு அவரது காட்டில் மழை பெய்யும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் மிக அதிக விலைக்கு போன வீரர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அவரை 24.75 கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்து வாங்கியது. கொல்கத்தா அணி கடந்த முறை கோப்பையை வென்றாலும், ஒருசில போட்டிகளில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. இதனால் அவரை கேகேஆர் அணி கழற்றி விட்டுள்ளது. கேகேஆர் கழற்றி விட்டாலும், கடந்த ஆண்டு ஏலத்தில் அவருக்கு இருந்த மவுசு இப்போதும் இருக்கிறது.

அர்ஷ்தீப் சிங் (இந்தியா)

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இப்போதைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் குதிரை இவர்தான். 60 போட்டிகளில் ஆடியுள்ள அர்ஷ்தீப் சிங், இதுவரை 95 விக்கெட்களை எடுத்துள்ளார். அதனாலேயே இந்த ஐபிஎல் ஏலத்தில் அவரது கிராக்கி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஷ்தீப் சிங்கை அணியில் தக்க வைக்காத பஞ்சாப் கிங்ஸ் அணியே, அவரை ரைட் டு மேட்ச் கார்டை பயன்படுத்தி தக்க வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...