திருவண்ணாமலை மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கர்நாடக மாநில எல்லை பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை பேசியிருக்கிறது. பட்டியலினத்தை சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே யார் பெரிய ஆள் என்கிற மோதல் அடிக்கடி நடக்கிறது. ஊருக்கு பொதுவான வேடியப்பன் கோவில் கும்பிடுவது முதல், ஊருக்கு பொதுவான தண்ணீர் தொட்டி பிரச்சனை வரை அடிக்கடி சண்டை நடக்கிறது. இதனால் ஹீரோ ஹரி, ஹீரோயின் சங்கீதா இருவரும் காதலித்து வருகிறார்கள். ஹரி விலகி செல்ல சங்கீதா பிடிவாதமாக காதல் செய்கிறார்.
ஊரில் இருபிரிவினருக்கும் வாழ்வாதராம் என்பது பழச்சாறு கம்பெனியில் வேலை செய்வதுதான். அப்படி வேலைக்குப் போகும்போது கன்னட பிரிவினருக்கும் தமிழ் தொழிலாளர்களுக்கும் மோதல் வருகிறது. அதில் சங்கீதா பாதிக்கப்படுகிறார். இதற்கு பழி வாங்கும் விதமாக ஹரி கன்னட பிரிவினரை தாக்க, பெரும் கூட்டம் சேர்ந்து தமிழ்ர்களை துரத்துகிறது. கடைசியில் என்ன ஆகிறது என்பதே படம்.
நல்ல கதை இதுவரை சொல்லப்படாத களம். ஆனால் எதைச்சொல்வது என்பதில் இயக்குனர் குழம்பிபோய் விட்டார். சாதி மோதலா, இரு மாநில மோதலா என்பதை சொல்வதில் தடுமாற்றம். இதனால் முதல் பாதி குழப்பமாக நகர்கிறது. இரண்டாம் பாதி படு விறுவிறுப்பாக நகர்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி கண்ணீர் வரவழைக்கிறது.
அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் அவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் எழில். குறிப்பாக சங்கீதா முகத்தில் பரிதாபத்தைக் காட்டி நடித்திருக்கிறார். அரைகுறை ஆடையுடன் க்ளைமேகஸ் காட்சியில் புழுதியில் அடிபடுவது உணர்ச்சிப்பூர்வமான காட்சி. அத்தனை பேரும் அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்கள். கன்னட மொழி அமைப்பைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன் கவனிக்க வைத்திருக்கிறார். இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.
பாறையை மையமாக வைத்து நடக்கும் சண்டையும், தண்ணீர் தொட்டி பிரச்சனையும் நிகழ்கால அரசியலை காட்டுகிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் திருவண்ணாமலையின் இன்னொரு பக்கத்தையும் அதில் மக்கள் போராட்டத்தையும் காட்டியிருக்கிறார். அந்த ஜூஸ் தொழிற்சாலையும், பின்னணி மலையும் அதைச்சுற்றிய மக்களையும் வேறொரு கோணத்தில் பார்க்க முடிகிறது. திரைக்கதை முதல் பாதியில் ஒரே இடத்தில் நகர்கிறது. இதை இன்னும் கவனமாக செய்திருக்கலாம் இயக்குனர் எழில் பெரியவேடி. இரண்டாம் பாதிதான் படம். படத்தொகுப்பாளர் சாய் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.