திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்ததில் யானைப் பாகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மன அழுத்தத்தில் உள்ள அந்த யானை அஸ்ஸாமுக்கு கொண்டு செல்லப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு தலைமை பாகனாக ராதாகிருஷ்ணன் (57), பாகன்களாக செந்தில்குமார் (47), உதயகுமார் (46) ஆகிய இரு சகோதரர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் ராதாகிருஷ்ணன், பணி முடிந்து மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பாகன் உதயகுமாரும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், பலுகலைச் சேர்ந்த சிசுபாலன் என்ற முன்னாள் ராணுவ வீரரும் யானை குடிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது இருவரையும் யானை தாக்கியுள்ளது. இதில், சிசுபாலன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தாக்கியதற்கு காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் கூறும்போது, “பாகனின் உறவினர் சிசுபாலன், யானை அருகே நின்று நீண்ட நேரம் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அதன்பின் யானையே தொட்டுள்ளார். புதிதாக ஒரு நபர் தன்னை தொட்டதை பொறுக்காத யானை சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியது. அவரை காப்பாற்ற வந்த யானை பாகன் உதயகுமாரையும் தாக்கியது தெரிய வந்துள்ளது. உதயகுமாரை தாக்கிய பின்னர்தான் தன்னுடைய பாகன் என்பதை புரிந்து கொண்ட யானை, அவரை எழுப்ப முயன்றுள்ளது” என்றார்.
அஸ்ஸாமில் இருந்து வந்த தெய்வானை
திருச்செந்தூர் கோயிலில் இருவரை தாக்கிக் கொன்ற தெய்வானை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட யானையாகும். 6 வயதில் அஸ்ஸாமில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த யானைக்கு இப்போது 17 வயது ஆகிறது.
இந்த யானையின் உண்மையான பெயர் பிரிரோனா. இது அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த லீலாபோரா என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. அதை திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் வாங்கினார். அவரிடம் இருந்து 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்செந்தூர் கோயிலின் அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த தேவதாச சுந்தரம் இந்த யானையை வாங்கியுள்ளார். பிரிரோமா என்ற அந்த யானையின் பெயரை தெய்வானை என்று மாற்றி வைத்துள்ளார்.
அதே நாளில் தெய்வானையுடன் 3 வயது ஆண் யானையையும் தேவதாச சுந்தரம் கோயிலுக்கு வாங்கிக் கொடுத்தார். திருச்செந்தூரில் இருந்த தெய்வானை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு உதவி பாகனான காவடி காளிதாஸை கொன்றது. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த இந்த யானையானது திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு, மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்தபோது சரண் என்பவரை இந்த யானை தாக்கியுள்ளது. இதனால் அந்த யானையை பாகன்கள் கையாளவே அஞ்சும் நிலை இருந்தது. இதனால் யானையை மீண்டும் அஸ்ஸாமுக்கே கொடுத்துவிடுமாறு அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழக அறங்காவல் துறையோ தெய்வானை முறையாக பராமரிக்கப்படும் என தெரிவித்து அந்த யானையை அஸ்ஸாமுக்கு கொடுக்க மறுத்துவிட்டது. தற்போது தெய்வானை தாக்கி இரண்டு பாகன்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த யானை மீண்டும் அஸ்ஸாமுக்கே செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.