மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல சீசன் தொடங்குவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
7 கியூ காம்ப்ளக்ஸ்கள்
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும் அளவுக்கு நிலைமை செல்லாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பம்பையில் பக்தர்கள் மழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படாமல் இருக்க ஏழு கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பம்பை ராமமூர்த்தி மண்டபத்தின் அதே அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய பந்தல் கட்டப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
சபரிமலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக சென்னை முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுமென தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19, 26, டிசம்பர் 3,10,17,24 ,31, ஜனவரி 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:20 மணிக்கு கிளம்பும் 06111 என்ற எண் கொண்ட ரயில், அடுத்த நாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது.
இதேபோல், மறுமார்க்கத்தில் நவம்பர் 20, 27, டிசம்பர் 4,11,18, 25, ஜனவரி 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து மாலை 4:20 மணிக்கு கிளம்பும் 06112 என்ற எண் கொண்ட ரயில், மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 11:35 மணிக்கு வந்தடைகிறது
70 ஆயிரம் பக்தர்கள்
ஆன்லைனில் முன்பதிவு செய்த 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்ய, இன்று முதல் நாள்தோறும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே முன்பதிவு செய்த 60 ஆயிரம் பேர் மற்றும் பம்பா, நிலக்கல் , எரிமேலி பகுதிகளில் நேரடியாக சென்று ஸ்பாட் புக்கிங் செய்த 10 ஆயிரம் பேருக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் காப்பீடு
இந்தாண்டு முதல் முறையாக பக்தர்கள் தங்க சிறப்பு இடங்களும், பக்தர்களுக்கு 5லட்சம் ரூபாய்க்கான காப்பீடும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம் கேரள டி.ஜி.பி ஷெய்க் தர்வேஷ் தலைமையில் பம்பா ஸ்ரீ ராமசாகிதம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. அதில் பம்பா, சபரிமலை சன்னிதானம், நிலக்கல் பகுதிகளில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் டி.ஜி.பி ஷெய்க் தர்வேஷ் கூறுகையில், “மண்டலகால மகரவிளக்கு பூஜைகளின்போது பக்தர்கள் நல்லபடியாக தரிசனம் செய்வதற்கு போலீசார் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். சன்னிதானத்திற்கு செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் சுகமான தரிசனம் நடத்துவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியதே போலீசாரின் முதற்கட்ட பணி. சபரிமலை மண்டல காலத்தில் போலீசார் நியமிக்கப்படுவது வெறுமனே வேலைசெய்வதற்காக மட்டும் அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.