குளத்தில் மலர்ந்திருந்த தாமரையை அகற்றச் சொன்னது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு, வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பில், ரூ.12.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் போரூர் பசுமை பூங்காவை நேரில் ஆய்வு செய்திருந்தார். அப்போது, ஏரியில் சில தாமரைகள் பூத்திருந்த நிலையில், அங்கு மலர்ந்து இருந்த சில தாமரைகளை பார்த்து, “தாமரை எங்கும் மலரக்கூடாது” என அமைச்சர் அதிகாரிகளிடம் பேசி இருந்தார். அமைச்சர் பாஜகவை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியதை புரிந்துகொண்ட அதிகாரிகள் சிரித்தனர். இந்த விஷயம் பாஜக தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தமிழக முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன், ” அரசு அமைக்கும் பூங்காவில் குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு . குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே… வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்.
ரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள்,. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள். நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவதை மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்… இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்” என்று கூறினார். தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தாமரை எங்காவது மலர்ந்தால்தானே கோபம் வருவதற்கு. பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் கூண்டோடு ஓரம் கட்டி விட்டோம். எங்களுக்கு டென்ஷன் இல்லை. நாலு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த திமுக எட்டு காலு பாய்ச்சலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், மாவட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் குறைகளையும் மக்கள் தேவைகளையும் நேரடியாக சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.