பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன் என்பது நமக்கு புதிய பெருமை.
ஜேடி வான்ஸின் மனைவி உஷா சிலுக்குரி, இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வட்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். உஷா சிலுக்குரியின் பெற்றோர் 1970-லேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். உஷாவும் ஜேடி வான்ஸும், கடந்த 2013-ம் ஆண்டு யேல் சட்டப் பள்ளியில், ’வெள்ளை அமெரிக்காவின் சமூக வீழ்ச்சி’ என்ற விவாதக் குழுவில் முதன்முதலில் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் சந்திப்புகள் தொடர, காதல் மலர்ந்திருக்கிறது.
ஆந்திராவின் மருமகன்
2014-ம் ஆண்டில் கென்டக்கியில் அவர்களின் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உஷா சிலுக்குரி வான்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் ஜேடி வான்ஸ் வென்றதால், அமெரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத இரண்டாவது பெண்மணி ஆகியிருக்கிறார் உஷா. அவரது உறவினர்கள் ஆந்திராவில் உள்ள சாய்பாபா, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மற்றும் தேவி பாலா சீதா கோயில்கள் போன்ற உள்ளூர் கோயில்களுக்கு நில நன்கொடைகள் வழங்கியதற்காக இன்றளவும் மதிக்கப்படுகின்றனர்.
உஷாவின் பாட்டி பெருமிதம்
உஷாவின் கணவர் தேர்தலில் வென்றிருப்பது அவரது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள உஷாவின் பாட்டி சிலிக்கூரி சாந்தம்மா, “அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக ஜேடி வான்ஸின் பெயரை முன்மொழிந்தபோதே அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தேன். இந்திரா காந்தி, விஜயலட்சுமி பண்டிட் போன்ற பெண்மணிகள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இது உஷாவின் முறை. உஷாவும் அவர்களைப் போல் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன்.
வான்ஸின் வெற்றியில் உஷாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அத்துடன் சட்டரீதியான பல விஷயங்களில் ட்ரம்புக்கும் உஷா உதவியாக இருந்துள்ளார். சட்டத் துறையில் கெட்டிக்காரியான உஷா, எங்கள் குடும்பத்துக்கும், இந்தியாவுக்கும் மேலும் பல பெருமைகளை சேர்ப்பார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
6 இந்தியர்கள் வெற்றி
இந்தியாவின் மருமகன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே, அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார்.
ஏற்கெனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியினர்களான ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.